அரசு விழாவை தேர்தல் பரப்புரை மேடையாக்குவதா என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (நவ. 22) வெளியிட்ட அறிக்கை:
"மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட அரசு நிகழ்வை பாஜக - அதிமுக தேர்தல் கூட்டணி அறிவிப்பு மேடையாக்கப்பட்டுள்ளது. அரசு விழாவில் அரசின் திட்டங்களை விளக்குவதும், சில சாதனைகளை எட்டியிருப்பதாகவும் கூறுவது மரபாகும்.
அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள், கட்சி எல்லைகளைத் தாண்டிய பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்வில் முதல்வரும், துணை முதல்வரும் போட்டிப் போட்டுக் கொண்டு பாஜகவின் விசுவாசிகள் என்பதை காட்டிக் கொண்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, வாஜ்பாய் ஆட்சியில் நடந்த தவறுகளை கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, 'அதிமுக இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைக்காது' என்று உறுதியளித்ததை காற்றில் பறக்க விட்டு, அதிமுக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்தனர்.
அரசு விழாவை, சிறிதும் வெட்கமின்றி தேர்தல் கூட்டணி அறிவிப்பு மேடையாக்கிய மலிவான செயலில் ஈடுபட்ட முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கும், இந்த மரபு மீறிய செயலைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.