ஜி.கே.வாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம்ஏற்பு : தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

செய்திப்பிரிவு

மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பு மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (நவ. 22) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து, நீர்த்தேக்கம் மற்றும் மெட்ரோ ரயில் 3-வது வழித்தட திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இது மிகுந்த வரவேற்கத்தக்கது.

சென்னையை சுற்றி பல்வேறு நீர்த்தேக்கங்கள் இருந்தபோதும், சென்னை மக்களின் நீர் தேவை என்பது பல ஆண்டுகளாக பற்றாக்குறையாகதான் இருக்கிறது. அவற்றை போக்கும் வகையில் சென்னை அருகில் உள்ள தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தை புதிதாக உருவாக்கப்பட்டு, இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை வாழ் மக்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கு ஓர் சிறந்த தீர்வு தற்போது ஏற்பட்டு இருக்கிறது. தமிழக அரசு நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நீலப் புரட்சிக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயும் துறைமுகம் கட்டமைப்புக்கு 1 லட்சம் கோடி ரூபாயும் சாலை மேம்பாட்டுக்கு 57 ஆயிரம் கோடியும் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்கத்தக்கது.

ஏழை, எளிய, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவுகளை நிறைவேற்றும் வகையில், இன்று தமிழக அரசு அவர்களின் நலனில் அக்கரையோடு 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்து அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி இருக்கிறது.

அதோடு நிற்காமல் மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்த மாணவ, மாணவிகளின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு செலுத்தும் என்று கூறியிருப்பது ஏழை, எளிய, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, ஏழை, எளிய மாணவர்களின் கல்வியின் தொடர் வளர்ச்சிக்கு வழிவகுத்து இருப்பது மிகுந்த வரவேற்கத்தக்கது".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT