துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் கடத்தி வந்த 2 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
துபாயில் இருந்து மதுரை வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை வந்த பயணிகள் 133 பேரிடம் சோதனை செய்தனர்.
திருச்சியைச் சேர்ந்த ஜெயலானி, ஜெயராணி ஆகிய இருவரும் 2 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. மெழுகு போன்ற வளையும் தன்மையுள்ள பொருளைப் பயன்படுத்தி தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு வந்தனர்.
பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.98 லட்சம். தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.