திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்த சஷ்டி விழாவில் 7-வது நாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமான்- தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் பக்தர்கள் பங்கேற்பின்றி கோயில் முன்புள்ள கடற்கரையில் நடைபெற்றது.
விழாவில் 7-ம் நாளான நேற்று திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பாடாகி 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்து சேர்ந்தார். மாலையில் சுவாமி குமரவிடங்கப் பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி தெய்வானை அம்மனுக்கு காட்சி அருளினார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றும் வைபவமும், இரவில் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தென்மண்டல காவல் துறை ஐஜி முருகன், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், திருச்செந்தூர் ஏஎஸ்பி. ஹர்ஷ்சிங், கோயில் இணை ஆணையர் கல்யாணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகள் முழுவதும் கோயில் நிர்வாகத்தால் யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.