தமிழகம்

பேரூர் அருகே மடத்தில் கோ-சாலை அமைத்து, இறைச்சிக்காக விற்கப்படும் பசுக்களை வாங்கி பராமரிக்கும் சிவனடியார்கள்

டி.ஜி.ரகுபதி

தமிழக கிராமங்களில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. பால் மற்றும் சாணத்துக்காக பசுக்கள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பால் சுரப்பு குறைந்தாலும் பலர் பசுக்களை இறுதிவரை பராமரிக்கின்றனர். அதேசமயம், குடும்பச்சூழல், பொருளாதார தேவைகள் காரணமாக பால் சுரக்காத பசுக்களை, கால்நடைச் சந்தைகள் மூலம் இறைச்சிக்காக விற்பவர்களும் உள்ளனர்.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த சிவனடியார்கள், இறைச்சிக்காக விற்கப்படும் பசுக்களை வாங்கி, கோ-சாலை அமைத்து பராமரித்து வருகின்றனர். கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் அருகே, திருவாவடுதுறை ஆதினத்தின் கிளை மடத்தில், கோ-சாலையை பராமரித்துவரும் சிவனடியார்களில் ஒருவரான இளையராஜா ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

சிவனை கடவுளாக வழிபடும் சிவனடியார்கள், பசுக்களை தெய்வமாக மதிக்கின்றனர். கடவுள் மீது உள்ள ஈர்ப்பாலும், பசுக்களின் மீது உள்ள அன்பாலும், இறைச்சிக்காக அடிமாட்டுக்கு செல்லும் பசுக்களை மீட்டு, முறையாக கோ-சாலை அமைத்து பராமரிக்க நான், செந்தில் ஐயா (அண்டவானர் அருள்துறை) உள்ளிட்ட சில சிவனடியார்கள் முடிவு செய்தோம். கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் திருவாவடுதுறை ஆதினம் சார்பில், பேரூர் கிளை மடத்தில் அரை ஏக்கர் இடத்தில் கோ-சாலை அமைக்க எங்களுக்கு அனுமதி வழங்கினர். அந்த இடத்தில், கடந்த இரு ஆண்டுகளாக கோ-சாலையை பராமரித்து வருகிறோம்.

அந்தியூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்கும் கால்நடைச் சந்தைகளுக்கு சென்று, அடிமாட்டுக்கு செல்லும் பசுக்களை விலைக்கு வாங்கி, கோ-சாலைக்கு கொண்டுவருகிறோம். ஒரு பசுமாடு வாங்க குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் தேவைப்படும். சிவனடியார்களாகிய நாங்கள் ஆளுக்கு ஒரு தொகை என பங்கிட்டு, பசுவை வாங்குகிறோம். கால்நடைச் சந்தை மட்டுமல்லாது, வீடுகளில் இருந்தும் அடிமாட்டுக்கு அனுப்பும் பசுக்களை வாங்கி பராமரிக்கிறோம். இதுவரை 28 பசுக்களை மீட்டு, பராமரித்துவருகிறோம். தவிர, 2 குதிரைகளும் எங்களது கோ-சாலையில் உள்ளன. இவற்றை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் செலவாகிறது. வைக்கோல், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை போன்ற தீவனங்கள் வாங்கி அளிக்கப்படுகின்றன.

இதற்கான செலவையும் நாங்களே பங்கிட்டுக்கொள்கிறோம். இங்குள்ள 2 பசுக்கள் தினமும் சராசரியாக ஒரு லிட்டர் பால் சுரக்கின்றன. அவை, பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்கு அபிஷேகத்துக்கு அளிக்கப்படுகின்றன. தவிர,கோ-சாலைக்கு தினமும் ஏராளமானோர் வந்து பசுக்களை வணங்கிச் செல்கின்றனர். அவர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு தீவனங்களை வாங்கித் தருகின்றனர்.

மேலும், மாதத்துக்கு ஒருமுறை கால்நடை மருத்துவர்களை வரவழைத்து, உரிய மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. எந்த ஒரு ஆதாயத்துக்காகவும் இல்லாமல், சேவை அடிப்படையில் இதை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT