வண்டலூர் பேருந்து நிலையத்துக்காக, ஓட்டேரி விரிவு பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து, அப்பகுதி கிராம மக்கள் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவரிடம் நேற்று மனு அளித்தனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் பகுதியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2013-ம் ஆண்டு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ரூ.376 கோடியில் 60 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதற்காக, வண்டலூர்-ஒரகடம் செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால், அங்கு நெல், கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளதால், நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், பேருந்து நிலையத்துக்கு நிலம் அளிக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என ஒட்டுமொத்தமாக அனைத்து விவசாயிகளும் மனு அளித்தனர்.
இந்நிலையில், வண்டலூர் பேருந்து நிலையத்துக்காக ஓட்டேரி விரிவு பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக தகவல் பரவியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள், கிராமக் குழு கூட்டத்தை கூட்டி, பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரனிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, ஓட்டேரி கிராம மக்கள் கூறியதாவது: குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில், பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம். ஏற்கெனவே பல்வேறு திட்டங்களுக்கு நிலம் அளித்து, அதில் கிடைத்த சிறிதளவு பணத்தை கொண்டு இங்கு வீடுகளை அமைத்து குடியேறியுள்ளோம். இந்நிலையில், மீண்டும் நிலங்களை கையகப்படுத்தினால் நாங்கள் மீள முடியாத துயரத்துக்கு தள்ளப்படுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவர் குணசேரகன் கூறியதாவது: வண்டலூர் பேருந்து நிலையத்துக்கு ஓட்டேரி விரிவு பகுதியில் நிலம் தேர்வு செய்யப்படுவதாக தகவல் பரவியதால், கிராம மக்கள் ஒன்று கூடி ஒருமித்த கருத்தாக மனு அளித்துள்ளனர். ஓட்டேரியில் நிலம் ஆய்வு செய்யப்படுவதாக ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் ஏதும் வரவில்லை. எனினும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் கிராம சபா கூட்டத்தில் ஆலோசித்து, மாவட்ட ஆட்சியரிடம் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதுகுறித்து, செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர் செல்வம் கேட்டபோது, “வண்டலூர் பேருந்து நிலையத்துக்கான நிலம் தேர்வு செய்வது தொடர்பாக அனைத்து பணிகளையும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கவனித்து வருகிறது. பேருந்து நிலையத்துக்கான நிலம் தேர்வு செய்யும் பணி இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பான, அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றார்.