மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவின் சூரசம்ஹாரத்தின்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான். 
தமிழகம்

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் கந்தசஷ்டி விழா

செய்திப்பிரிவு

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் கந்தசஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானசூரசம்ஹாரம் நேற்று முன்தினம்நடைபெற்றது. இரவு முருகன் பத்மாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சிநடைபெற்றது. கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் இந்தநிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் இந்நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் 108 முறைகோயிலை சுற்றும் வழக்கம் கொண்டிருந்தனர். அதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை முருகப் பெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாகத்தினர் திட்டமிட்டபடி சுவாமி உள்புறப்பாடு மட்டுமே நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் பத்மாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் குன்றத்தூர் முருகன் கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில் ஆகிய இடங்களிலும் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. இதில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய கோயில்களில் கரோனா அச்சத்தால் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இம்மூன்றுமாவட்டங்களிலும் கிராமப் புறங்களில் உள்ள பல்வேறு கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT