தமிழகம்

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிப்பது வெறும் விளம்பர யுக்தி- திலகவதி சாடல்

ப.கோலப்பன்

சாகித்ய அகாடமிக்கு விருதை வழங்கும் தகுதி மட்டுமே இருக்கிறது. அதை திரும்பப் பெற்றுக் கொள்ளும் அதிகாரம் இல்லை.

பெருகிவரும் சகிப்புத்தன்மையின்மையினை எதிர்க்கும் வகையில் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை காஷ்மீர் முதல் கேரளா வரை உள்ள எழுத்தாளர்கள் பலரும் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், அகாடமியின் முன்னாள் உறுப்பினருமான திலகவதி, "சாகித்ய அகாடமிக்கு விருதை வழங்கும் தகுதி மட்டுமே இருக்கிறது தவிர அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ளும் அதிகாரம் இல்லை" என கருத்து கூறியிருக்கிறார்.

அவர் மேலும் கூறியதாவது:

"கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியின் கொலையை கண்டித்து சாகித்ய அகாடமி விருதை சில எழுத்தாளர்கள் திருப்பி அளித்துள்ளனர். இது வெறும் விளம்பர யுக்தியே.

நாட்டின் பன்முகைத்தன்மையை பாதுகாப்பதில் மதம், இனம் என எந்த ஒரு காரணத்துக்காகவும் சமரசம் செய்ய முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இருப்பினும், நயன்தாரா சேகல் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்தார் என்ற காரணத்துக்காக மற்றவர்களும் அதை பின்பற்றுவது நிச்சயமாக ஒரு நல்ல முடிவாக இருக்க முடியாது.

ஒருவர் பின் ஒருவராக சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிப்பதாக கூறுவது பிரச்சினைகளை சரியாக அலசி ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவாகும். இந்தச் செயலானது, ஒரு ரயில் பயணத்தின்போது ஒரு ரயில் பெட்டியில் ஒருவர் எதேச்சையாக தும்மலிட்டால் தொடர்ந்து அடுத்தடுத்து பலரும் தும்மல் இடுவது போன்ற செயலாகும்.

கல்புர்கி கொலைக்கு சாகித்ய அகாடமி வலுவான எதிர்ப்பை பதிவு செய்யவில்லை எனக் கூறி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அறிக்கை வெளியிடும் முன்னர் எனது கருத்துகளை கேட்கத் தவறியது வருத்தமளிக்கிறது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழக பெண் எழுத்தாளர்களில் நான் ஒருவர் மட்டுமே இப்போது உயிருடன் உள்ள நிலையில், என்னுடைய கருத்துகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கேட்டிருக்க வேண்டும்" என்றார்.

(கடந்த 2005-ம் ஆண்டும் கல்மரம் என்ற நாவலுக்காக திலகவதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது)

திலகவதியின் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் கூறும்போது, "எங்களது அறிக்கையை வெளியிடும் முன்னர் எவ்வளவு முடிந்ததோ அந்த அளவுக்கு அனைத்து எழுத்தாளர்களை தொடர்பு கொண்டோம். ஆனால், திலகவதியை எங்களால் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

நீலா பத்மநாபனையும் கூட எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. நல்ல கருத்துகளை நிலைநாட்டுவதற்காக எங்களுடன் யார் கைகோக்க விரும்பினாலும் நாங்கள் அவர்களை வரவேற்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT