தமிழகம்

கேளிக்கை வரி விலக்கு பெறும் திரைப்படத்துக்கான வரிச் சலுகை பார்வையாளர்களுக்கே போய்ச் சேர வேண்டும்: 4 வாரத்துக்குள் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கேளிக்கை வரி விலக்கு பெறும் திரைப்படத்துக்கான வரிச்சலுகை பார்வையாளர்களுக்கே போய்ச் சேர வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில், நான்கு வாரத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் கடந்தாண்டு டிசம்பர் 25-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கிற்கு “கயல்” திரைப்படம் பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் சென்றேன். கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட இப்படத்துக்கு கேளிக்கை வரி சலுகைக் கட்டணத்தைக் கழித்துவிட்டுத்தான் டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் முழு கட்டணத்தையும் வசூலித்தார்கள். எனவே, கேளிக்கை வரிச் சலுகையை எனக்கு திரும்பித் தரும்படி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.மகாதேவேன் பிறப்பித்த உத்தரவு:-

தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்படும் திரைப்படத்துக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. திரைப்படம் காண வரும் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டு இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறை, கவர்ச்சி போன்றவை இல்லாத படங்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது. இந்த வரி விலக்கு உரிமை அல்ல. இது ஒரு மானியம் ஆகும்.

கேளிக்கை வரிச் சலுகையின் பயன்கள், திரைப்படத் தொழிலுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும்தான் போய்ச் சேர வேண்டும் என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. அதனால், மனுதாரரிடம் கூடுதலாக வசூலித்த கேளிக்கை வரிச் சலுகைக் கட்டணத்தை (ரூ.107) திருப்பித் தர வேண்டும். மனுதாரரைப் போல மற்றவர்களிடமும் வசூலித்த பணத்தைத் திருப்பித் தர இயலாது.

எனவே, மற்றவர்களிடம் வசூலித்த கேளிக்கை வரி சலுகைக் கட்டணத்தை வணிக வரி மற்றும் பதிவுத் துறை, வணிக வரித் துறை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர் செலுத்த வேண்டும். கேளிக்கை வரிச் சலுகைக் கட்டணம் திரைப்படம் காண வரும் பார்வையாளர்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.

எனவே, கேளிக்கை வரிச் சலுகை படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு போய்ச் சேருவதை உறுதி செய்யும் வகையில் இந்த உத்தரவு கிடைத்த 4 வாரத்துக்குள் உரிய உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும். கேளிக்கை வரிச் சலுகைக் கட்டணத்தை பார்வையாளர்களிடம் வசூலித்த சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர் மற்றும் வரிச் சலுகைக் கட்டணத்தை வசூலிக்கும் அனைத்து திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு திரையரங்க உரிமையாளர் ரூ.107 திருப்பித் தர வேண்டும்.

இவ்வாறு நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT