சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை திறந்து வைத்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2 மற்றும் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வந்தார். அவருக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். வழி நெடுக பாஜக தொண்டர்கள் வரவேற்பளித்தனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஹோட்டலில் தங்கிய அவர் மாலை 4-30 மணி அளவில் தமிழக அரசு விழாவில் பங்கேற்க கலைவாணர் அரங்கம் வந்தார்.
அவரை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட திட்டம், கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம்.
கரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம், திருமுல்லைவாயலில் ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் Lube Plant அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் தலைமையில் நடந்த இந்த விழாவில், துணை முதல்வர் சிறப்புரையாற்றினார். பின்னர் அமித் ஷா பேசினார். மாலை 6-30 மணி அளவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நன்றியுரையுடன் விழா முடிந்தது.