திருச்சி மாவட்டத்தில் 5 காவல் நிலையங்களில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (நவ. 20) திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்காக அந்த இடங்களுக்கு அவர் காரில் சென்று வரும்போது வழிநெடுகிலும் ஏராளமான இடங்களில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
அப்போது, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகவும், அனுமதியின்றி கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், கரோனா நோய் பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் கூறி பேரிடர் மேலாண்மைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்திலுள்ள 6 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின், திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்டோர் மீது மணப்பாறை, புத்தாநத்தம், துவாக்குடி, திருவெறும்பூர், பெல் ஆகிய 5 காவல் நிலையங்களில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதவிர திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுத்ததாக திமுக பகுதி செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட 350 பேர் மீது கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.