புயல்காற்று, தொடர் கனமழை அபாயம் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்திட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“பாக் ஜலசந்தி நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வரும் 25-ம் தேதி இரவு நாகபட்டினம் மாவட்டத்தில் கரையேறும் என தனியார் வானிலை அறிவியல் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் கரையேறும் புயற்காற்று டெல்டா மாவட்டங்களின் வழியாக மேற்கு நோக்கு பயணித்து நீலகிரி, கோவை மாவட்டங்களை கடந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நுழைந்து அரபிக் கடலில் கலக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மாநிலம் காரைக்கால், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல் (வடக்கு) கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மிக கனத்த மழையும், 110 கி.மீ தொடங்கி படிப்படியாக குறையும் காற்றும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வானிலை அறிவியல் மையம் வெளியிடும் அறிக்கையின் மீது மத்திய, மாநில அரசுகளும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையமும் ஆக்கபூர்வ அணுக வேண்டும். அது தனிப்பட்ட நபரின் கருத்து என அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை அரசு உணர வேண்டும்.
24.11.2020 இரவு முதல் 27.11.2020 அதிகாலை அளவுக்கு அதிகமான காற்று அடிக்கும் போது மின்விநியாகம் முற்றிலும் தடைபடும் என்பதால் அனைத்து ஊராட்சிகளிலும் ஜெனரேட்டர் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக குடிநீர் மோட்டார்களை இயக்குவதற்கு முன்னுரிமை தர வேண்டும்.
கஜா புயலில் ஏற்பட்ட அனுபவத்தை படிப்பினையாகக் கொண்டு, பாதிக்கப்படும் மக்களுக்கு தட்டுபாடு இல்லாமல் உணவு வழங்க அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஆங்காங்கு இருப்பில் வைக்க வேண்டும்.
மருத்துவக் குழுக்கள், தடுப்பு மருந்துகள், வழிகளில் ஏற்படும் தடைகளை அகற்றுவதற்கான இயந்திரங்கள், தேவையான பணியாளர்களை முன்கூட்டியே ஆங்காங்கு தயார் நிலைப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், காவல் மற்றும் தீயணைப்புத்துறை என அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ‘பேரிடர் தடுப்புக் குழுவாக’ செயல்பட உரிய உத்தரவுகள் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.