திருநெல்வேலி மாவட்டத்தில் 1475 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைகுறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பார்வையிட்டார்.
வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ளதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 1475 வாக்குச் சாவடிகளில் இம்மாதத்தில் இன்றும், நாளையும், அடுத்த மாதத்தில் 12, 13-ம் தேதிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமை அதிகாரிகள் கண்காணித்தனர்.
முகாமில் 01.01.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் வாக்காளர் பட்டியல்களில் தங்களது பெயரினைச் சேர்க்க படிவம் -6, வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள நபர்களில் இறந்தவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பெயரினை நீக்க படிவம் -7, பெயர், முகவரி மற்றும் புகைப்பட விபரங்களை திருத்தம் செய்ய படிவம் 8 மற்றும் அதே தொகுதிக்குள் இடமாற்றம் செய்திட படிவம் 8ஏ ஆகியவற்றை வழங்கலாம். தங்கள் முகவரிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை மனுக்களை அளிக்கலாம். மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் www.nvsp.in மூலமாகவும் Voters Helpline Mobile Appமூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.