கடலூரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி சைக்கிளில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணி நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (நவ. 21) கடலூரில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
டவுன்ஹாலில் இருந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் சைக்கிள் பயணமாக பேரணியில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், அவர் இருசக்கர வாகனம், ஆட்டோ, பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
சைக்கிள் பேரணி டவுன்ஹாலில் இருந்து புறப்பட்டு செம்மண்டலம் வரை சென்று அரசு தலைமை மருத்துவமனை வழியாக மீண்டும் டவுன்ஹாலை வந்தடைந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்டாட்சியர் பலராமன், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் உட்பட கல்லூரி, மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.