தமிழகம்

டிசம்பர் 21-ம் தேதி வியாழன், சனி கிரகங்கள் ஒற்றை நட்சத்திரம் போல் தோன்றும்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அபூர்வ நிகழ்வு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

20 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழன், சனி கிரகங்கள் மிக நெருக்கமாகத் தோன்றும் நிகழ்வு தற்போது நடக்கவுள்ளது. டிசம்பர் 21 அன்று இரண்டு கிரகங்களும் ஒற்றை நட்சத்திரம் போல் தோன்றக்கூடும் என்று அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் துறை இணைப்பேராசிரியரும், மைக்கேல் ஃபாரடே அறிவியல் மன்ற நிர்வாகியுமான டாக்டர் ஸ்டீபன் இன்பநாதன் கூறியதாவது:

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி ஆகியவை ஒவ்வொரு நாள் இரவும் ஒரு ஒளி நிகழ்ச்சியை நடத்துகின்றன.

அவற்றை இந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் அனைவருமே வெறும் கண்களால் காணலாம். வியாழன், சூரியனில் இருந்து வரிசையில் ஐந்தாவது மற்றும் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம்

வியாழனுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. கலிலியோ கலிலீ பூமிக்கு அப்பால் முதல் நிலவுகளைக் வியாழனில் கண்டுபிடித்தார்.

பிரபஞ்சத்தைப் பார்க்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்திய மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். சனி, சூரியனில் இருந்து ஆறாவது கிரகம் மற்றும் நமது சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய கிரகம். தற்போது வியாழனின் இடதுபுறத்தில் சனி தோன்றும். சனி இருமடங்கு தொலைவில் இருப்பதால் வியாழனை விட பாதி பிரகாசமாக இருக்கிறது.

வரவிருக்கும் நாட்களில், ஒவ்வொரு இரவிலும், இரண்டு மாபெரும் கிரகங்களும் ஒன்றோடு ஒன்று நெருங்கத் தோன்றும். இந்த மகத்தான இணைவு 19.6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆகிய இரவுகளில், இந்த இரண்டு கிரகங்களும் மிக நெருக்கமாக தோன்றும். இந்த அரிதான தன்மை, ‘கிரேட் கன்ஜங்ஷன்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஏனென்றால் கிரகங்களை போலில்லாமல் இவை இரண்டும் அடிக்கடி நெருங்குவதில்லை. ‘கிரேட் கன்ஜங்ஷன்’ நிகழ்வில் வியாழன் மற்றும் சனி 0.1 டிகிரி இடைவெளியில் மட்டுமே இருக்கும்.

'கிரேட் கான்ஜங்க்ஷன்' பார்க்க சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை. தெற்கு-தென்மேற்கில் பிறை நிலவு வானம் இருட்டியவுடன் தெரியும். வியாழன் பெரும்பாலும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தோன்றும், அதன்பிறகு சனி தோன்றும். இந்த கிரகங்களைக் கவனிக்க, உள்ளூர் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சுமார் 30 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பார்க்க முடியும். ஒவ்வொரு 20 வருடங்களுக்கும், வியாழன் மற்றும் சனி ஒரு சந்திப்பைக் கொண்டிருக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாட்கள் போகப்போக இந்த இரண்டு கிரகங்களுக்கிடையிலான இடைவெளி படிப்படியாக எவ்வாறு குறையும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

டிசம்பர் 21 அன்று இரண்டு கிரகங்களும் ஒற்றை நட்சத்திரம் போல் தோன்றக்கூடும். கடைசியாக இதுபோன்ற நிகழ்வு ஜூன் 5, 1978 நடந்திருக்கிறது.

ஆனால், இந்த ஆண்டைப் போலவே, இந்த இரண்டு கிரகங்களும் ஜூலை 16, 1623 அன்று மிக நெருக்கமாக தோன்றின. அவை 0.08 டிகிரி இடைவெளியில் மட்டுமே இருந்தன. அதன் பிறகு, இந்த ஆண்டு (398 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்த இரண்டு கிரகங்களும் மிக நெருக்கமாக வருகின்றன. 2080-ம் ஆண்டில் மார்ச் 15-ம் தேதி இதுபோன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT