ஸ்டேடியம் கட்டுமான சர்ச்சையால் டி-20 கிரிக்கெட் போட்டிகளை திடீரென்று இன்று புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் ரத்து செய்தது. இதையடுத்து, தனியார் நட்சத்திர உணவகத்தில் இருந்து 120 வீரர்களும் அங்கிருந்து புறப்பட்டனர்.
புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் நிறுவனமொன்று அப்பகுதியில் அரசு நிலம், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ளதாக புகார் எழுந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதில் விதிமீறி மின் இணைப்பு, அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தது, நகரத்திட்டக்குழுமம் அனுமதியின்றிக் கட்டிடம் கட்டியதாக அந்தந்தத் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.
அதேபோல், முதல்வர் நாராயணசாமியும், "கிரிக்கெட் ஸ்டேடிய விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்திருந்தார்.
இச்சூழலில், தலைமைச்செயலாளர் அஸ்வினி குமாரும் விரிவான விசாரணையில் இறங்கினார். கிரிக்கெட் ஸ்டேடிய விவகாரம் தொடர்பாக பிசிசிஐ-க்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முழு தகவல்களையும் இரு நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்ததாகத் தெரிவித்திருந்தார்.
இச்சூழலில் கிரிக்கெட் மைதானத்துக்குச் செல்லும் தண்ணீர் விநியோகம் மற்றும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது, புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) சார்பில் டி20 கிரிக்கெட் போட்டி முதல் முறையாக துத்திப்பட்டு ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டு வந்தது. வரும் 27-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருநத்து. 6 அணிகள் பங்கேற்றிருந்த இந்த போட்டி இரவு - பகல் ஆட்டம் மற்றும் பகல் ஆட்டம் என தனித்தனியாக நடத்தப்பட்டு வந்தது
தற்போது 10 கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அரசின் நடவடிக்கையால் டி20 கிரிக்கெட் போட்டியை திடீரென இன்று கிரிக்கெட் சங்கம் ரத்து செய்தது. போட்டிக்காக தனியார் நட்சத்திர உணவகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆறு அணிகளைச் சேர்ந்த 120 கிரிக்கெட் வீரர்களும் அங்கிருந்து புறப்பட்டனர்.