யானைகவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் மருமகள் ஜெயமாலா ஆக்ராவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை தனிப்படை போலீஸார் இன்று சென்னை அழைத்து வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டை, விநாயக மேஸ்திரி தெரு பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்துவந்தவர் பைனான்ஸ் அதிபர் தலில் சந்த், மனைவி புஷ்பா பாய்,இவர்களது மகன் சித்தல் குமார். ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர்கள் கடந்த 11-ம்தேதி வீட்டு படுக்கை அறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தனர்.
இதுதொடர்பாக யானைகவுனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து இறந்து போன சித்தல் குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், அவரது கூட்டாளிகள் கொல்கத்தாவைச் சேர்ந்த ரவீந்தரநாத், விஜய் உத்தம் கமல் ஆகிய 3 பேரை மகாராஷ்டிரா மாநிலம் புனே சென்று கைது செய்தனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விலாஷ், கூட்டாளி ராஜூ சிண்டே ஆகிய மேலும் 3 பேர் ஆக்ராவில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தனிப்படை போலீஸாரின் செல்போன் எண்களை தெரிந்து வைத்துக் கொண்டு, அவர்களின் நகர்வை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே தப்பி வந்துள்ளனர்.
செல்போன் சிக்னல் உதவியுடன்..
இருப்பினும், சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சென்னைதனிப்படை போலீஸார் ஜெயமாலாதப்பிக்க உதவிய அவரது நண்பரின் செல்போன் சிக்னலை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கி 3 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஆக்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சென்னை அழைத்து வருகின்றனர்.
ஜெயமாலா பெண் என்பதால்அவரை அழைத்து வர பெண்காவலர் ஒருவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் ஆக்ரா விரைந்துள்ளார். இதற்கிடையில் ஜெயமாலாவை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில்தான் கொலைக்கான அத்தனை மர்ம முடிச்சுகளும் அவிழும் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.