தமிழகம்

நெல்லையில் மழை நீடிப்பு: பாபநாசம் அணை மூடல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடிக்கிறது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்திருந்தது. பரவலாக மழை பெய்துவருவதால் அணை மூடப்பட்டது.

பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் காலையில் 121.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,598 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து நேற்று காலையில் 125 அடியாக இருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 140.68 அடியிலிருந்து 142.91 அடியாகவும், மணிமுத்தாறு நீர்மட்டம் 91.60 அடியிலிருந்து 2 அடி உயர்ந்து, 93.15 அடியாகவும் இருந்தது. வடக்குபச்சையாறு நீர்மட்டம் 15 அடியில் இருந்து 17 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 9.97 அடியில் இருந்து 10.46 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 37.25 அடியாகவும் உயர்ந்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அணைப்பகுதிகள் மற்றும் பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 3, சேர்வலாறு- 6, மணிமுத்தாறு- 1.6, அம்பாசமுத்திரம்- 6, பாளையங்கோட்டை- 3.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மழையின் தீவிரம் குறைந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 13 மி.மீ., சிவகிரியில் 11 மி.மீ., சங்கரன்கோவிலில் 9 மி.மீ., குண்டாறு அணையில் 5 மி.மீ., ஆய்க்குடியில் 1.60 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பிவிட்டதால், இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 105.50 அடியாக இருந்தது. நேற்று அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. பகலில் வானம் தெளிவாகக் காணப்பட்டது. வெயில் சற்று அதிகரித்திருந்தது.

தொடர் மழையால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்ததாலும், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததாலும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT