எப்போதும்வென்றான் அணையில்தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால், தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் காட்டாற்று வெள்ளமாகபெருக்கெடுத்து எப்பொதும்வென்றான், ஆதனூர் வழியாக வேப்பலோடை அருகே கடலில் கலந்து வந்தது.
இதனை தடுக்க கடந்த 30.6.1976-ம் ஆண்டு எப்போதும் வென்றானில் 4 மீட்டர் உயரமும், 2,670 மீட்டர் நீளமும் கொண்ட அணைகட்டப்பட்டது.
இதன் கொள்ளளவு 3.53 மில்லியன் கன அடியாகும். 642.87 ஹெக்டேர் பரப்பளவு கொண்டஇந்த அணையில் 2 மதகுகள்அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு பெய்தவடகிழக்கு பருவமழையின் போது இந்த அணை நிரம்பியது. அதன் பின்னர் கடந்த ஆண்டு முழுமையாக நிரம்பியது. இந்நிலையில் இந்தாண்டு கடந்த 3 நாட்களாக மணியாச்சி, கயத்தாறு, கழுகுமலை ஆகிய பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.
தூர்வாரப்படாததால் அணை மண் மேடாகி விட்டதாகவும், இதனால் ஒரு மழை பெய்தால் கூட நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்வதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து எப்போதும்வென்றான் பகுதி விவசாயிகள் மேம்பாட்டு சங்க உறுப்பினர் க.திருமணிகாமராஜ் கூறும்போது,‘‘எப்போதும்வென்றான் அணையில் ஆண்டு தோறும்முறையாக பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் சுமார் 2.5 மீட்டர் உயரம்வரை மட்டுமே தண்ணீரை தேக்கும்நிலை உள்ளது. அணையின் கீழ் 2நீர்வரத்து கால்வாய்கள் உள்ளன. வடக்குப்புறம் உள்ள கால்வாய் 2.5 கி.மீ. தூரமும், தென்புறமும் கால்வாய் 3 கி.மீ. தூரமும் கொண்டவை. இந்த கால்வாய்கள் முறையாக தூர் வாரப்படவில்லை.இதன் காரணமாக இப்பகுதியில் விவசாயம் சரிவர நடக்கவில்லை’’ என்றார்.