திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மேற்கொண்ட பயணத்தின்போது வழக்கத்துக்கு மாறாக 1,400 போலீஸார் குவிக்கப்பட்டது அக்கட்சியினரிடத்தில் திகைப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (நவ.19) இரவு திருச்சி வந்தார். இன்று (நவ. 20) காலையில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள சிந்தாமணி பகுதியில் திமுக கட்சிக் கொடியேற்றி, கல்வெட்டினைத் திறந்து வைத்தார்.
அதன்பின் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற திருவெறும்பூர் ஒன்றிய துணைச் செயலாளர் இல்லத் திருமண விழா, மருத்துவர் அலீம் - தொழிலதிபர் கே.எம்.எஸ் ஹக்கீம் இல்ல மணமக்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தல், மணப்பாறையில் தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் பண்ணைப்பட்டி கோவிந்தராஜ் இல்லத் திருமண விழா உள்ளிட்டவற்றில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதும், முடித்துவிட்டு திருவாரூர் செல்வதற்காக திரும்பி வரும்போதும் ஏராளமான இடங்களில் திமுகவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
வழக்கமாக முதல்வர் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் அல்லது விவிஐபிக்கள் வரும்போது காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால், இம்முறை அதற்கு மாறாக திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள், வரவேற்பு அளிக்கக்கூடிய இடங்களில் மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம், டி.ஐ.ஜி ஆனிவிஜயா மேற்பார்வையில் 3 எஸ்.பி.க்கள், 6 ஏடிஎஸ்பிக்கள், 9 டிஎஸ்பிக்கள், 37 இன்ஸ்பெக்டர்கள் உட்பட சுமார் 1,400 போலீஸார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர்.
இப்பணிகளுக்காக திருச்சி மாவட்டக் காவல்துறையில் இருந்து மட்டுமின்றி கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல்படையிலிருந்தும் கூடுதலான காவலர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இதுதவிர ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் சமாளிப்பதற்காக வஜ்ரா, வருண் உள்ளிட்ட கலவரத் தடுப்பு வாகனங்களும், போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்காக பேருந்துகள், வேன்கள் உள்ளிட்டவையும், தங்க வைப்பதற்கான திருமண மண்டபங்களும் 7 இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
காவல்துறையினரின் வழக்கத்துக்கு மாறான இந்த திடீர் நடவடிக்கை திமுகவினரிடத்தில் திகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்ததால் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் முன்கூட்டியே கைது செய்ய திட்டமிட்டுள்ளனரா என்ற குழப்பமும், பதற்றமும் அவர்களிடத்தில் ஏற்பட்டது.
இந்நிலையில், மணப்பாறையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் திருவாரூர் புறப்பட்ட உதயநிதிக்கு திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
அதன்பின் அங்கிருந்து புறப்பட்டபோது உதயநிதியுடன் ஏராளமான கார்களில் திமுகவினர் பின்தொடர முயற்சி செய்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய ஏடிஎஸ்பி கீதா தலைமையிலான போலீஸார் உதயநிதியின் காருடன் 3 கார்கள் மட்டும் செல்ல அனுமதியளித்தனர். மற்ற கார்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் திமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அப்போது உதயநிதி சென்ற பிறகு 5 நிமிடங்கள் கழித்து காரில் செல்லுமாறு காவல்துறையினர் கூறியதை திமுகவினர் ஏற்றுக் கொண்டதால் அமைதி திரும்பியது.
இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கரேனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, அதை வலியுறுத்தும் வகையிலும், பேரணியாகச் செல்வதைத் தடுக்கும் வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. அவரது பயணத்தின்போது காவல்துறையால் எந்த இடையூறும் ஏற்படவில்லை" என்றனர்.
'அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்'
மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் மக்கள் சரியான பதிலடி கொடுத்தனர். திமுகவினரிடம் அப்போதிருந்த அதே எழுச்சி, உற்சாகம் இப்போதும் காணப்படுகிறது. இதை சட்டப்பேரவைத் தேர்தல் வரை கொண்டு சென்று மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும்.
இதற்காக திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இன்று தொடங்கி 100 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன். ஊர், ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளேன். அடிமை அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பாஜகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.