தமிழகம்

அமித்ஷா தமிழக வருகையின் பலன் பூஜ்ஜியமாக இருக்கும்: மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி

எஸ்.ஸ்ரீனிவாசகன்

தமிழகத்தில் அமித்ஷா வருகையின் பலன் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும் எனக் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூர் பேட்டியளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஐராவதநல்லூரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்ட விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னதாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 103வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜகவைப் பொறுத்தவரை வேறு கட்சியில் இருந்து தொண்டர்களை இரவல் வாங்கி கட்சி நடத்துகின்றனர். நோட்டாவுடன் போட்டி போடுகின்ற கட்சி அது. தமிழகத்தைப் பொறுத்தவரை நோட்டாவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி.

பாஜகவினருக்கு ஆள் இல்லாமல் மற்ற கட்சியில் இருந்து ஆட்களை சேர்த்து, அரசியல் செய்கிறது. கிராமம் தோறும் 100 ஆண்டு காலம் கிளை அமைப்பு வைத்து கொடி பிடித்து தொண்டர்கள்கள் நிறைந்த கட்சி காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் கட்சியின் அமைப்பைப் பற்றி பேசுவதற்கு பாஜகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. பாஜக முதலில் நோட்டாவை தோற்கடித்துவிட்டு அதற்குப்பின் காங்கிரஸ் கட்சியின் அமைப்பைப் பற்றி பேசட்டும்" என்றார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து செய்தியாளர் கேள்விக்கு, "காங்கிரஸ் கட்சியும் திமுகவும் நீண்டநாள் கூட்டணியில் இருக்கின்றன. 2004-ல் சோனியா காந்தியும் கலைஞரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி இது. பல வெற்றிகளையும், தோல்விகளையும் பெற்றுள்ளது. ஒருங்கிணைந்து பணியாற்றும்பொழுது மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியில் கிடைத்தது. மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒரு அங்கம் என்பது மிக முக்கியமானது. அதனால் இந்தக் கூட்டணி 210 இடங்களுக்கு மேல் மிகப் பெரிய வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது" என்றார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகை தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என எல்.முருகன் கூறியது குறித்த கேள்விக்கு, "பாஜக தலைவர் அமித்ஷா அவர்கள் கடந்து 2015 தேர்தலுக்கு முன்னால் தமிழகம் வந்தார் அப்போது என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும், பாஜக-2016 இல் நோட்டாவுடன் போட்டி போட்டது. அமித்ஷா 2019 தேர்தலுக்கு முன்பும் வந்தார் அப்பொழுது இருந்த ஒரு இடத்தையும் பாஜக இழந்தது. தற்போது மீண்டும் அமித்ஷா வருகிறார்.? தமிழகத்திற்கு அமித்ஷா வருகைக்கான பலன் மீண்டும் பூஜ்ஜியமாக தான் இருக்கும்" எனக் கூறினார்.

SCROLL FOR NEXT