போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள். 
தமிழகம்

புதுச்சேரியில் ஒரு வாரமாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்; திமுக முழு ஆதரவு: காங்.அரசு மீது குற்றச்சாட்டு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் ஒருவாரமாக அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில் இப்போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக நேரில் சென்று திமுக தெரிவித்துள்ளது.

புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள், தங்களுக்கு மூன்று ஆண்டுகளாக அறிவித்து வழங்கப்படாமல் உள்ள போனஸ் மற்றும் நிலுவைச் சம்பளம் தரவேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி சாரம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் எதிரில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் கூட்டணிக் கட்சியான திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ இன்று (நவ. 20) பங்கேற்று, ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "புதுச்சேரி அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, செயல்படுத்தாமல் உள்ளது. அந்தவகையில் அங்கன்வாடி ஊழியர்களுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக போனஸ் வழங்குவதாக அறிவித்து நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. இதனையும், நிலுவைச் சம்பளத்தையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

கரோனா காலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் பணி பாராட்டும் வகையில் இருந்தது. ஆட்சியாளர்களும் அதைத் தங்களது நிகழ்ச்சிகளில் பல முறை வெளிப்படுத்தி வந்துள்ளனர். ஆனால், கரோனா காலத்தில் பணியாற்றியதற்காக சிறிய அளவில் கூட ஊக்கத்தொகை அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதுவும் சரியல்ல.

அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை கூட அமல்படுத்தப்படாமல் உள்ளது. அங்கன்வாடி ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நியாயமானதுதான். அங்கன்வாடி ஊழியர்கள் நடத்தும் அனைத்துவிதமான போராட்டங்களிலும் பங்கேற்று, முழு ஆதரவையும் திமுக அளிக்கும்" என்று தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், "காலியாக உள்ள நிரந்தர அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களில் 3 ஆண்டுகள் பணிமுடித்த கவுரவ அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களைப் பணியமர்த்த வேண்டும், நிரந்தரப் பணியிடங்களில் 8 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும், 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி வழங்க வேண்டிய 50 சதவீத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுகிறோம்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT