பாஜக நடத்தும் வேல் யாத்திரையைக் கண்டு, தமிழக அரசு அரண்டு போய் உள்ளது என, பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில், அதன் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் அக்கட்சியினரால், கடந்த 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வேல் யாத்திரை முதல் கட்டமாக நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2-வது கட்டமாக, வேல் யாத்திரை, மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில், கடந்த 16-ம் தேதி தருமபுரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வேல் யாத்திரை வரும் 22-ம் தேதி கோவைக்கு வருகிறது. வேலுடன் பிரத்யேக வாகனத்தில், கோவைக்கு வரும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருதமலை முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.
முன்னதாக, வடவள்ளி அருகே ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பாஜக சார்பில், மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தரிசனத்துக்குப் பின்னர், சிவானந்தா காலனியில் நடக்கும், வேல் யாத்திரை தொடர்பான எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
மேலும், இந்தப் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். சிவானந்தா காலனியிலும் கட்சியினர் சார்பில், மாநிலத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு பொள்ளாச்சிக்குச் செல்கின்றனர்.
முன்னதாக, சிவானந்தா காலனியில் பொதுக்கூட்டம் நடக்கும் பகுதியை, பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.நந்தகுமார், யாத்திரை ஊடகப் பொறுப்பாளர் 'புல்லட்' சதீஷ், ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் சபரி கிரிஷ் உள்ளிட்டோர் இன்று (நவ.19) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எந்த இடத்தில் மேடை அமைப்பது என ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இன்று (நவ. 19) செய்தியாளர்களிடம் கூறும்போது, "கோவையில் வரும் 22-ம் தேதி நடக்கும் யாத்திரை, பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன், மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா பங்கேற்கின்றனர். வஉசி மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்த மாநகராட்சியிடம் அனுமதி கேட்டிருந்தோம். அரசியல் காரணங்களுக்காக அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்துதான் தற்போது சிவானந்தா காலனியில் நடத்த முடிவு செய்துள்ளோம்.
கந்தசஷ்டி கவசத்தை அவமதித்தவர்கள், இந்து மதத்தை அவமதித்தவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக இந்த வேல் யாத்திரையில் மக்கள் எழுச்சியுடன் ஆதரவு அளித்து வருகின்றனர். வேல் யாத்திரை குறித்தும், பாஜக அரசின் திட்டங்களால் ஏற்பட்ட பயன்கள் குறித்தும் தெரிவிப்பதே இந்தப் பொதுக்கூட்டத்தின் நோக்கம்.
இந்தப் பொதுக்கூட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். இன்னும் அவர்கள் பதில் தெரிவிக்கவில்லை. கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்துதான் நாங்கள் செயல்படுகிறோம். தமிழக அரசு வேல் யாத்திரையைக் கண்டு அரண்டு போய் உள்ளது. இதைத் தடுக்க சகல முயற்சிகளையும் செய்து கொண்டுதான் அரசு உள்ளது. அதையும் மீறி நாங்கள் நடத்திக் காட்டுவோம்" என்றார்.