தமிழகம்

பழனிக்கு வேல் நடைபயணம் செல்ல அனுமதி கேட்டு நாம் தமிழர் கட்சி வழக்கு: திண்டுக்கல் எஸ்.பி பதிலளிக்க உத்தரவு

கி.மகாராஜன்

திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு வேல் நடைபயணம் செல்ல அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் பழனி மண்டல செயலர் காஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நாம் தமிழர் கட்சி சார்பில் நவ. 21-ல் திண்டுக்கல் மாவட்ட புறவழிச்சாலையில் இருந்து, மயில் ரவுண்டானா வழியாக பழனி கோயிலுக்கு வேல் நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி கோரி போலீஸாரிடம் நவ.5-ல் மனு கொடுத்தோம்.

ஆனால் கரோனா ஊரடங்கைக் காரணமாக சொல்லி அனுமதி வழங்க மறுத்து போலீஸார் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்து நவ. 21-ல் வேல் நடைபயணத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT