சேலத்தில் ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் 44 புதிய திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், வனவாசியில் ரூ.123.53 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக 44 திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி இன்று (நவ. 19) அடிக்கல் நாட்டினார்.
விழாவில் ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சேவூர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். எம்.பி. சந்திரசேகரன், எம்எல்ஏக்கள் செம்மலை, வெங்கடாஜலம், சக்திவேல் உள்ளிட்டோர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் 6,832 பயனாளிகளுக்கு ரூ.46.39 கோடி மதிப்பீட்டில் தையல் இயந்திரம், அம்மா ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
குடும்பத்துடன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்பு
முன்னதாக, சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் உள்ள பிரசித்தி பெற்ற சென்றாயப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபட்டார். முதல்வர் பழனிசாமிக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.
சென்றாயப் பெருமாள் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்கிட, புனித நீரைக் கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.