தமிழகம்

ஐயப்ப பக்தர்கள் வருகை குறைந்ததால் தேனியில் அன்னதான சேவைகள் ஒத்திவைப்பு

என்.கணேஷ்ராஜ்

பல்வேறு கட்டுப்பாடுகளால் ஐயப்ப பக்தர்கள் வருகை வெகுவாய்க் குறைந்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த அன்னதான சேவை முகாம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தவழியேதான் கடந்து செல்வர்.

இவர்களுக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஓய்விற்காக இடவசதி செய்துதருதல், மருத்துவ வசதி, இருமுடிகளில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டுதல், வாகனஓட்டுநர்களுக்கு சுக்குகாப்பி வழங்குதல் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்வது வழக்கம்.

தேனி மாவட்ட நுழைவு பகுதியில் இருந்து குமுளி மலைப்பாதை வரை விவசாயிகள், ஆன்மிக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் இதற்காக முகாம் அமைத்து பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சேவை செய்வர்.

தற்போது கரோனா நடவடிக்கையாக தினமும் ஆயிரம் பேர் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் மண்டல பூஜை துவங்கியும் பக்தர்கள் வருகை இல்லாத நிலை உள்ளது. பல ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் அன்னதானம் உள்ளிட்ட சேவைகளை செய்து வரும் ஆன்மிக ஆர்வலர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வீரபாண்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் சிறிய அளவிலேயே செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தேனி ஐயப்ப பக்தர் வெற்றிவேல் கூறுகையில், 20ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை முதல் தை முதல்நாள் வரை அன்னதான முகாம் அமைந்து பல்வேறு சேவைகள் செய்து வருகிறோம்.

தற்போது பக்தர்கள் வருகை இல்லை. கேரள அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் கூட்டம் அதிகரிக்கும். அப்போதுதான் அவர்களுக்கு நாங்கள் சேவை செய்ய வசதியாக இருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT