அண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி மோசடி புகார் கூறப்பட்டுள்ளதால், நிதி அலுவலர்கள், கணக்கு தணிக்கையாளர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்தார்.
இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும். அவருடன்இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும்.
இதுதவிர, சுரப்பா மீது குற்றம்சாட்டி புகார் கொடுத்தவர்களையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். ரூ.280 கோடி அளவிலான நிதி மோசடி புகார் என்பதால் நிதி அலுவலர்கள், கணக்கு தணிக்கையாளர்கள் உதவியுடன் விசாரணை பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.