ஆவடி - பருத்திப்பட்டு பகுதியில் மழைநீர் எளிதில் வெளியேற கால்வாய்களை தூர்வாரும் பணிகளை திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார். 
தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழையால், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் கனமழையால், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதுமட்டுமல்லாமல், ஆவடி- சங்கரர் நகர், வேப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆட்சியர் பொன்னையா, மழைநீர் தேங்கும் பகுதிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இதில் பேரூராட்சி துறை மூலம்ரூ.1.75 கோடி மதிப்பில், திருநின்றவூர் பேரூராட்சியின் 10 முதல் 13-வது வார்டுவரை, திருநின்றவூர் ஈசா ஏரிக்கரை ஓரம்மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மழைநீர் வெளியேறும் பகுதிகளான கன்னிகாபுரம், இராமதாசபுரம் மற்றும் நடுகுத்தகை பகுதிகளை பார்வையிட்டு, மழைநீர் தேங்காதவாறு எளிதில் வெளியேறும்விதமாக அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, ஆவடி - பருத்திப்பட்டில், வசந்தம் நகர், இந்திரா நகர்பகுதிகளில் மழைநீர் தேங்காதவண்ணம் எளிதில் வெளியேறவடிகால்வாய்களை தூர்வாரி,ஆழப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்துமுடிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பிறகு, மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் காலிமனை உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட ஆட்சியர், உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதுமட்டுமல்லாமல், கும்மிடிப்பூண்டி அருகே சென்னை குடிநீருக்காக, ரூ.380 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை, வரும் 21-ம் தேதிமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஆயத்தப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், சோழவரம் ஏரியின் நீர் இருப்பு மற்றும் கரைகளின் பலம் குறித்து, ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, கோட்டாட்சியர் பிரீத்திபார்கவி, பொதுப்பணித் துறையின் கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT