தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (37). காய்கறி சந்தையில் வேலை பார்த்து வருகிறார். இவர், தனது செல்போனில் குழந்தைகளின் தவறான படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதனை தனது நண்பர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து தேசிய காணாமல் போன குழந்தைகள் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளை கண்காணிக்கும் மையம் மூலம் மாநில குற்ற ஆவண காப்பகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து, முருகேசன் மீது தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
போலீஸ் எச்சரிக்கை
“18 வயதுக்கு உட்பட்ட குழந்தை களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவதும், குழந்தைகளை தவறாக படம் எடுப்பதும், அதை மற்றவர்களுடன் இணையத்தில் பகிர்வதும், பார்ப்பதும் சட்டப்படி குற்றம். இதுபோன்ற குற்றங்களை செய்யும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்கும் விதமாக தேசிய அளவில் காணாமல் போன குழந்தைகள் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளை கண்காணிக்கும் மையம் (NCMEC) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது செல்போன் மற்றும் கணினியில் உள்ள IP address (இணைய நெறிமுறை முகவரி) மூலம், அதை பயன்படுத்தும் நபரின் விவரங்களை பெற்று மாநில குற்ற ஆவண காப்பகத்தின் (SCRB) மூலம் நடவடிக்கை எடுக்கும்” என்று தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
இணையத்தில் பகிர்வதும், பார்ப்பதும் சட்டப்படி குற்றம்.