தமிழகம்

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கி மறைவு: ரவிக்குமார் எம்.பி. இரங்கல்

செய்திப்பிரிவு

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கி மறைவு தமிழ் ஆய்வுக்குப் பேரிழப்பு என்று ரவிக்குமார் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

''ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாந்தர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி (27.04.1941 - 18.11.2020) உலக அளவில் புகழ்பெற்ற தமிழறிஞராவார். ரஷ்யாவின் 10 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர் தமிழ் மொழியைக் கற்றுத் தந்தார். அவரிடம் பயின்ற மாணவர்கள் இன்று கல்வி, ஊடகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர்.

ரஷ்யாவில் பேராசிரியர் துப்யான்ஸ்கியை மையமாகக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் ஆய்வுகள் நடந்து வந்தன. அதிலும் குறிப்பாக சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு முன்னேற்றப் பதிப்பகம், ராதிகா பப்ளிஷர்ஸ் போன்றவை மூடப்பட்டதற்குப் பிறகு தமிழ் தொடர்பான ஆர்வம் ரஷ்யாவில் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதைக் கடந்த 25 ஆண்டுகளாகத் தனி ஒரு மனிதராகக் காப்பாற்றி வந்தவர் அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கி. ஆண்டுக்கு ஒருமுறை சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறையை ஒழுங்கு செய்து இந்த ஆர்வம் குறையாமல் அவர் காப்பாற்றி வந்தார்.

கோவையில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரும் பங்கேற்றார். அங்கு தொல்காப்பியம் குறித்து அவர் வாசித்த கட்டுரை பல விவாதங்களை எழுப்பியது. ஆனால், துப்யான்ஸ்கி தனது ஆய்வுக் கட்டுரையில் எழுப்பிய ஒரு பிரச்சினையை யாரும் விவாதிக்கவில்லை. “சங்க இலக்கியங்களுக்கும், தொல்காப்பியத்துக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகளை அவரது கட்டுரை சுட்டிக்காட்டியது. அதற்காக சில உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டார்.

''தொல்காப்பியம் நொச்சித் திணை பற்றி எங்கும் பேசவில்லை. உழிஞைத் திணைப் பற்றிப் பேசும்போது அதன் துணைப் பிரிவாக ஒரே ஒரு இடத்தில் நொச்சி குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தொல்காப்பியத்துக்குப் பிறகு எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலை நொச்சித் திணையை விரிவாகப் பேசியுள்ளது.

பிரிவு குறித்துத் தொல்காப்பியம் பேசிய இடத்தில் பிரிவுக்கான காரணங்களாக ஓதல், பகை, தூது ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. ஆனால், சங்கப் பாடல்களில் பிரிவுக்கு இரண்டு காரணங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. பொருள் மற்றும் போர் ஆகியவை பற்றி மட்டுமே அவை பேசுகின்றன. ஓதல், தூது ஆகியவை சங்கப் பாடல்களில் எங்குமே பிரிவுக்கான காரணமாகப் பேசப்படவில்லை. பெண்ணோடு கடற்பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்காப்பியம் கூறுகிறது.

அத்தகைய நிகழ்வு எதுவும் சங்கப் பாடல்களில் இல்லை. தலைவனின் தோழன், காதலர்கள் சந்திப்பதற்காகப் பன்னிரண்டு விதமான காரியங்களைச் செய்வது குறித்தும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ஆனால், சங்கப் பாடல்களில் அத்தகைய நிகழ்வுகளை எங்குமே நாம் காணமுடியவில்லை'' என்று துப்யான்ஸ்கி குறிப்பிட்டார். இந்தக் கருத்துகள் இப்போதும் விவாதிக்கப்படாமலேயே உள்ளன.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கலைஞர் கருணாநிதி உருவாக்கிய விருது தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தால் டாக்டர் அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கியும் அதைப் பெற்றிருப்பார். இப்போதாவது அந்த விருதுகளை வழங்க நடவடிக்கை எடுத்துத் துப்யான்ஸ்கியைக் கவுரவிக்கத் தமிழக அரசு முன்வரவேண்டும்''.

இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT