திருச்சி மாவட்டத்தில் 12 இடங்களில் குவாரிகள் நடத்த இன்று ஏலம் நடைபெற்ற நிலையில், தங்கள் கிராமத்தில் குவாரி நடத்த ஏலம் விடக்கூடாது என்று புள்ளம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட ஊட்டத்தூர் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சாம்பட்டியில் 3 இடங்கள், புத்தாநத்தம், புதுவாடி, லால்குடி வட்டத்தில் நெய்குளம், ஊட்டத்தூர், முசிறி வட்டத்தில் கரட்டாம்பட்டி, துறையூர் வட்டத்தில் கொட்டையூர், தொட்டியம் வட்டத்தில் அப்பநல்லூர், நத்தம், எம்.புத்தூர் ஆகிய 12 இடங்களில் ஏற்கெனவே கல் உடைக்கப்பட்ட மற்றும் இதுவரை கல் உடைக்கப்படாத குவாரிகளை 5 ஆண்டுகளுக்கு ஏலம் விடுவதற்கான அறிவிக்கை திருச்சி மாவட்ட அரசிதழில் நவ.3-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கான மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளை நவ.17-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் செலுத்தவும் மற்றும் திறந்த முறை ஏலம் மற்றும் மறைமுக ஒப்பந்தப் புள்ளி உறைகள் திறப்பது ஆகிய நடைமுறைகள் ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடத்தில் உள்ள வருவாய் நீதிமன்றத்தில் நவ.18-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி, துணை ஆட்சியரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான ச.ஜெயப்பிரித்தா தலைமையில் கனிமவளத் துறை உதவி இயக்குநர் டி.அண்ணாதுரை முன்னிலையில் இன்று (நவ.18) காலை குவாரி ஏலம் நடைபெற்றது.
ஒவ்வொரு இடமாக அறிவித்து ஏலம் விடப்பட்ட நிலையில் ஊட்டத்தூருக்கான அறிவிப்பு வெளியானபோது அந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அறிவழகன் உள்ளிட்ட கிராமத்தினர் சென்று, தங்கள் கிராமத்தில் குவாரி அமைக்க ஏலம் விடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும், ஊட்டத்தூரில் கிராமத்தில் புதிய குவாரிகள், கிரஷர்கள் அமைக்க அனுமதி தரக் கூடாது என்று கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதையும் எடுத்துக் கூறினர். இதனால், ஊட்டத்தூர் கிராமத்தில் குவாரி நடத்த யாரும் ஏலம் கோரி வரவில்லை.
இதுகுறித்து ஊட்டத்தூரைச் சேர்ந்த அறிவழகன் கூறுகையில், "ஊட்டத்தூர் கிராமத்தில் ஏற்கெனவே 5 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், பல்வேறு வகைகளில் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. பாறைகளை உடைக்க வெடி வெடிப்பதால் விளைநிலங்களில் தூசி படிகிறது. இதனால், கிராம மக்கள் கடும் அதிருப்தியிலும், வேதனையிலும் உள்ளனர்.
எனவே, ஊட்டத்தூரில் புதிய குவாரி அல்லது கிரஷர் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேலும், கடந்த நவ.7-ம் தேதி ஊட்டத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா தலைமையில் கிராமத்தினர் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.
இந்தநிலையில், இன்று ஏலம் நடைபெறவிருந்த நிலையில், கனிமவள உதவி இயக்குநரிடம் செல்போன் மூலமாகவும், நேரிலும் எங்கள் ஆட்சேபனையையும், கிராம மக்களின் எதிர்ப்பையும் தெரிவித்தோம். அரசு அலுவலர்களும் ஊட்டத்தூர் கிராமத்தில் குவாரி ஏலம் விடவில்லை என்று உறுதி அளித்தனர்" என்றார்.
கிராமத்தினர் எதிர்ப்புத் தெரிவித்த ஊட்டத்தூரைத் தவிர்த்து 11 இடங்களில் குவாரி ஏலம் எடுக்க வாய்ப்பிருந்தும், லால்குடி வட்டம் நெய்குளம் மற்றும் துறையூர் வட்டம் கரட்டாம்பட்டி ஆகிய இரு இடங்களில் உள்ள குவாரிகள் மட்டுமே ஏலம் போயின.
பல குவாரிகள் ஏலம் போகாதது குறித்து ஏலம் எடுக்க வந்த சிலரிடம் கேட்டபோது, "அனுபவசாலிகளால் மட்டுமே குவாரி தொழிலில் ஈடுபட முடியும். குவாரி நடத்துவதில் உள்ள அரசின் விதிமுறைகள், நடைமுறைச் சிக்கல்கள் என அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட குவாரி மூலம் வருவாய் கிடைக்குமா என்று பல்வேறு காரணிகளையும் ஆராய்ந்து கணக்கிட முடியும். இல்லையெனில், பெரிய இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். அந்தவகையில், குவாரிகள் ஏலம் போகாமல் இருந்திருக்கலாம்" என்றனர்.