கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் தனி அமைப்பு தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.
வேட்பாளர் அறிவிப்பின்போது சீட் கிடைக்காத அதிருப்தியில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாகவும், இதனால் பாதிப்பில்லை எனவும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாம் தமிழர் கட்சி தொகுதி வாரியாக சட்டப்பேரவை, மற்றும் மக்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதியை தவிர பிற தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கபபட்டுள்ளனர்.
பத்மநாபபுரம் தொகுதிக்கு சலீம் என்ற சீலன், குளச்சல் தொகுதியில் ஆன்றனி ஆஸ்லின், விளவங்கோடு தொகுதிக்கு மேரி ஆட்லின், கிள்ளியூர் தொகுதிக்கு பீட்டர், நாகர்கோவில் தொகுதிக்கு விஜயராகவன் ஆகியோரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு அனிட்டர் ஆல்வினும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பத்மநாபபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு தொடக்க காலத்தில் இருந்து உழைத்தவர்களுக்கு சீட் வழங்கவில்லை. கட்சியில் இருந்து மூத்த நிர்வாகிகள் நீக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டால் அதிருப்தி அடைந்தவர்கள் கடந்த 15ம் தேதி வேர்கிளம்பியில் உள்ள பத்மநாபபுரம் தொகுதி அலுவலக நுழைவு வாயில், மற்றும் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மேலும் தாங்கள் சொந்த செலவில் அமைத்த வேர் கிளம்பி, திருவட்டாறு, குலசேகரம் ஆகிய இடங்களில் உள்ள கட்சி அலுவலகங்கள் செயல்படாது என அறிவித்தனர்.
இதுகுறித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜான்சிலின் சேவியர்ராஜ் கூறுகையில்; 2013-ம் ஆண்டில் நாம் தமிழர் கட்சியை பல எதிர்ப்பை மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்த்தோம். ஆற்றூரில் நாம் தமிழர் அலுவலகத்தை அகற்ற காங்கிரஸார் முற்பட்டபோது பெரும் போராட்டத்தை சந்தித்து பத்மநாபபுரம் தொகுதியில் கட்சியை நடத்தி வந்தோம்.
இந்நிலையில் கட்சிக்காக உழைத்தவர்கள் சீட் கேட்டு விண்ணப்பித்தும் பத்மநாபபுரம் தொகுதியில் வேறு நபருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகளை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளனர்.
இதனால் நாங்கள் எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். எங்கள் ஆதரவாளர்களுடன் விரைவில் தமிழர்களை அடையாளப்படுத்தும் விதத்தில் ஒரு இயக்கத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம். வேறு கட்சிகளுடன் சேரப்போவதில்லை என்றார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் ரீகனிடம் கேட்டபோது; குமரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தொகுதி வாரியாக வேட்பாளர்களை அறிவித்ததுமே சீட் கிடைக்காத அதிருப்தியில் உட்கட்சிக்குள்ளே சில நிர்வாகிகள் பூசலை ஏற்படுத்தினர்.
இதற்கு காரணமான 5 நிர்வாகிகளை, கட்சி தலைமை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியது. இதனால் திக்கணங்கோட்டில் கடந்த 15ம் தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்த அதே நேரத்தில் வேர்கிளம்பி நாம் தமிழர் அலுவலகத்தில் சிலரை வைத்து கூட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மாவட்ட வாரியாக அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பக்கம் எந்த நிர்வாகியும், தொண்டர்களும் செல்லவில்லை. இதனால் குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.