தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை நீடித்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி 1100 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்கிறது.
தொடர் மழை:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. 16-ம் தேதி பகலில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் பிறகும் தொடர்ந்து இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மூன்றாவது நாளாக நேற்று இரவும் மாவட்டத்தில் கனமழை பெய்தது.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த 16-ம் தேதி பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீர் ஓரளவுக்கு வடிந்துவிட்டது. இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு, திருச்செந்தூர் சாலை, டூவிபரம், தபால் தந்தி காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி சார்பில் 50 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தலைமையிலான அதிகாரிகள் இந்த பணிகளை கண்காணித்து வருகின்றனர். இதேபோல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளும், தேங்கிய மழைநீரால் நோய்கள்ள் பரவாமல் தடுக்கும் பணிகளும் நேற்று நடைபெற்றன.
4 மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், 57 கிலோ பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டன. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 20 தூய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர் இந்த பணிகளை செய்து வருகின்றனர். இந்த பணிகளை டீன் சி.ரேவதி பாலன், கண்காணிப்பாளர் எல்.பாவலன், உறைவிட மருத்துவ அலுவலர் ஜே.சைலஸ் ஜெயமணி ஆகியோர் கண்காணித்தனர்.
நிரம்பும் நீர்நிலைகள்:
தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக நேற்று மாலை நிலவரப்படி ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி 1100 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. ஸ்ரீவைகுண்டம் வடகாலில் 1093 கன அடி, தென்காலில் 1230 கன அடி, மருதூர் மேலக்காலில் 400 கன அடி, கீழக்காலில் 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, குளங்களுக்கு செல்கிறது.
இதனால் தாமிரபரணி பாசனத்தில் உள்ள 53 குளங்களில் சிவகளை குளம் முழுமையாக நிரம்பிவிட்டது. மேலும் 10 குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன. 31 குளங்கள் 50 சதவீதம் அளவுக்கு நிரம்பி உள்ளன. மற்ற குளங்களுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதே போன்று கோரம்பள்ளம் வடிநில கோட்டத்தில் உள்ள 54 குளங்களில் ட்டப்பிடாரம், முறம்பன் உள்ளிட்ட 3 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. 10 குளங்கள் 50 சதவீதமும், 41 குளங்கள் 25 சதவீதம் மற்றும் அதற்கு குறைவாக நிரம்பி உள்ளன. ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான 407 குளங்களில் கோவில்பட்டி பகுதியில் உள்ள 3 குளங்கள் நிரம்பியுள்ளன. 12 குளங்கள் 75 சதவீதமும், 14 குளங்கள் 50 முதல் 75 சதவீதமும், 107 குளங்கள் 25 முதல் 50 சதவீதமும், 228 குளங்கள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.
மாவட்டத்தில் மழைக்கு நேற்று ஒரே நாளில் 5 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. இதுவரை 3 வீடுகள் முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியளவும் என மொத்தம் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன.
காயல்பட்டினத்தில் 21.5 செ.மீ. மழை:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 91 மி.மீ., காயல்பட்டினம் 215, குலசேகரப்பட்டினம் 77, விளாத்திகுளம் 48, காடல்குடி 46, வைப்பார் 26, சூரங்குடி 23, கோவில்பட்டி 39, கழுகுமலை 16, கயத்தாறு 68, கடம்பூர் 70, ஓட்டப்பிடாரம் 31, மணியாச்சி 47, கீழ அரசடி 10.4, எட்டயபுரம் 76, சாத்தான்குளம் 49, ஸ்ரீவைகுண்டம் 65, தூத்துக்குடி 33 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 215 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.