தமிழகம்

மூன்று ஆண்டு சட்டப்படிப்பை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

செய்திப்பிரிவு

மூன்றாண்டு சட்டப்படிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.எம்.ஆனந்த முருகன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் “குற்றப்பின்னணி உள்ளவர்கள் சட்டத்துறையில் நுழைவதைத் தடுக்கவும், அப்படிப்பட்டவர்களுக்கு காவல்துறை வழங்கிய ஆட்சேபம் இல்லா சான்றிதழை ரத்து செய்யவும், புதிதாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், “குற்றப்பின்னணி உள்ளவர்கள் சட்டப்படிப்பு படிக்கவும், வழக் கறிஞராகப் பதிவு செய்யவும் தடை விதிக்க வேண்டும். அடுத்துவரும் அகில இந்திய பார்கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது. மூன்று ஆண்டு சட்டப்படிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்பன உட்பட 14 வகையான கட்டுப்பாடுகளை விதித்தார்.

இதை எதிர்த்து அகில இந்திய பார் கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் 5 பிரிவு களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கு தடை விதிக்க வேண்டும். 5 ஆண்டு சட்டப்படிப்பை மட்டும் தொடர வேண்டும். சட்டக் கல்லூரிகளில் சீட்டுகள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும். பார் கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டு வரும்வரை, இந்திய பார் கவுன்சில் செயல்பாடுகளை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் கல்வியாளர்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரிடம் ஒப்படைப்பது பற்றி மத்திய அரசு ஆறு மாதங்களில் பரிசீலிக்க வேண்டும்.

பழமையான வழக்கறிஞர்கள் சங்கங்களைத் தவிர கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு வழங்கிய அங்கீகாரத்தை மாநில பார் கவுன்சில் திரும்பப் பெற வேண்டும். அகில இந்திய பார் கவுன்சில் தேர்தலில் குற்றப்பின்னணி இல்லாதது உள்ளிட்ட தகுதிகள் உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும். அதற்காக வழக்கறிஞர்கள் குறித்த தகவல்களை சரிபார்க்கும் வரை அகில இந்திய பார் கவுன்சிலின் செயல்பாடுகளை நிபுணர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் ஆகிய மேற்கண்ட பிரிவுகள் அனைத்துக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT