தூத்துக்குடியில் விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையோரத்தில் சக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த சாலையையொட்டி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 6 அடி அகலமுள்ள வாறுகால் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளதால், அதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து கோயிலை இடித்து அகற்ற ஜேசிபி இயந்திரத்துடன் மாநகராட்சி பணியாளர்கள் இன்று காலை அங்கு வந்தனர்.
இதனை அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவன் அங்கு விரைந்து மக்களோடு, மக்களாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விநாயகர் சிலை கனகராஜூக்கு சொந்தமான இடத்தில் தான் அமைந்துள்ளது. அவர் தான் கோயிலை பராமரித்து வருகிறது. எனவே, இந்த கோயிலை இடிக்கக்கூடாது எனக் கூறி எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் 60 அடி சாலையில் அமைந்து மறியல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விரைந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோயில் அகற்றப்படாது என மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தால் தான் போராட்டத்தை கைவிட முடியும் எனக் கூறி அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் செல்போன் மூலம் கீதாஜீவன் எம்எல்ஏவிடம் பேசினார்.
அப்போது, விநாயகர் கோயில் இப்போது இடிக்கப்படாது. அந்த பகுதியில் வாறுகால் அமைக்கும் போது இது தொடர்பாக பேசி முடிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.