முகமது இஸ்மாயில். 
தமிழகம்

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் மறைவு: காமராஜரே போற்றிய எளிமைக்குச் சொந்தக்காரர்!

என்.சுவாமிநாதன்

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தமிழகத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான முகமது இஸ்மாயில் நேற்று இரவு காலமானார்.

குமரி மாவட்டம் தக்கலையில் வசித்து வந்த முகமது இஸ்மாயில் காமராஜருக்கு நெருக்கமாக இருந்தவர். ஆளுநர் பதவி தேடி வந்தும் அதை ஏற்றுக்கொள்ளாத மனம், அப்பழுக்கற்ற நேர்மை என முகமது இஸ்மாயிலின் வாழ்க்கை, தியாகம் மற்றும் நேர்மையால் நிரம்பியது. அவரது மறைவு குமரி மாவட்ட மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த முகமது இஸ்மாயில் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் குமரி மாவட்ட இணைச் செயலாளர் தக்கலை ஹலீமா 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியதாவது:

''1980 முதல் 1984 வரை பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார் முகமது இஸ்மாயில். 80 சதவீதம் நாடார் சமூகத்தினர் நிரம்பிய இந்தத் தொகுதியில் மாற்றுச் சமூகத்தினரால் வெற்றி பெற முடிந்தது என்றால் முகமது இஸ்மாயில் மீது தொகுதி மக்களுக்கு இருந்த சாதி, மதத்தைக் கடந்த அன்பு எளிமையான அணுகுமுறையும்தான் காரணம். தன் வாழ்நாளின் இறுதி வரை சமூக நல்லிணக்கம் சார்ந்து நடக்கும் அனைத்துக் கூட்டங்களிலும் தவறாது பங்கெடுத்து வந்தார் இஸ்மாயில்.

1927-ம் ஆண்டு குளச்சலில் பிறந்த முகமது இஸ்மாயில், சட்டம் பயின்றவர். 1955-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். அன்றைய காலத்திலேயே குளச்சல் நகர்மன்றத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவரது வயது முப்பதுக்குள்தான். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் 1967 முதல் குமரி மாவட்டக் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், தேவகவுடா, வி.பி.சிங் ஆகியோருக்கு மிக நெருக்கமானவராகவும் இருந்தார். காமராஜருக்கும், முகமது இஸ்மாயில் மீது தனிப்பட்ட முறையில் பேரன்பு இருந்தது.

விருதுநகர் தோல்விக்குப் பின்பு நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் காமராஜர். அப்போது காங்கிரஸ் குமரி மாவட்டத் தலைவராக இருந்த இஸ்மாயில் ஏழை, விளிம்புநிலை மக்களிடம் ரொம்பவே நெருக்கமாக, எளிமையுடன் பழகுவதைப் பார்த்த காமராஜர் ரொம்பவே வியந்து போனாராம்.

குமரி மாவட்டம், தாய்த் தமிழகத்தோடு இணையப் பாடுபட்ட மார்ஷல் நேசமணியின் மறைவால் உருவான இடைத்தேர்தல் அது. 1969-ல் நடந்த அந்த இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார். அப்போது குமரி மாவட்டக் காங்கிரஸ் தலைவராக இருந்து, தொய்வின்றி உழைத்து வெற்றியைக் காமராஜருக்குப் பரிசாகக் கொடுத்ததில் முகமது இஸ்மாயிலுக்கும் பெரும்பங்கு உண்டு.

தக்கலை ஹலீமா

காமராஜர் காங்கிரஸ் இயக்கத்தின் ஆணிவேர். அவரது நாகர்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, இங்குள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் எல்லாம் காமராஜரின் வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். முகமது இஸ்மாயில் மட்டும் அவரது மாவட்டத் தலைவர் ஜீப்பிலேயே போய்க் கொண்டிருந்தார். இதைக் கவனித்த காமராஜர் குளச்சலில் இஸ்மாயிலை அவரது ஜீப்பில் இருந்து இறங்கச் செய்து, தானும் தன் வாகனத்தில் இருந்து இறங்கி இஸ்மாயில் தோள் மீது கைபோட்டுக்கொண்டு பேசினார். அந்த அளவுக்குக் காமராஜருக்கு, முகமது இஸ்மாயில் மீது பிரியம் இருந்தது.

1973-ல் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பதவிக்குப் போட்டி உருவானது. ஆளூர் பி.வி.ராகவனும், முகமது இஸ்மாயிலும் மோதினர். நாகர்கோவில் எம்.பி. என்ற அடிப்படையில் காமராஜர் குமரி மாவட்டக் குழு உறுப்பினராக ஓட்டுரிமை பெற்று இருந்தார். மாவட்டத்தின் அன்றைய எம்எல்ஏக்கள் அனைவரும் ராகவனுக்கு ஆதரவாகச் செயல்பட்டபோதும், காமராஜர் இஸ்மாயிலுக்கு ஓட்டுப் போட்டார். 56 ஓட்டுகள் பெற்று மீண்டும் முகமது இஸ்மாயில் குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆனார்.

ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலகட்டம் அது. கட்சியின் தேசிய நாடாளுமன்றக் குழுவுக்கு ஆறு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. அனைத்திந்திய அளவில் மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். ஆனால், 6 பேரை மட்டுமே தேர்வு செய்யமுடியும் என்பதால் அவர்களைப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க, கட்சி சிலரது வேட்பு மனுவைத் திரும்பப்பெறக் கோரியது. அதன்படி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். ஆனால், சுப்பிரமணியன் சுவாமி இதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் தேர்தல் நடந்தது. இதிலும் முகமது இஸ்மாயில் வெற்றிபெற்று கட்சியின் தேசிய உயர்மட்டப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெருக்கடி நிலை காலத்தில் ஆளுநர் ஆகும் வாய்ப்புக் கிடைத்தும், அதை ஏற்காது மக்களுக்காகவே பணி செய்தவர். காமராஜரை கிங் மேக்கர் என்பார்கள். இந்திரா காந்தியைப் பிரதமர் நாற்காலியில் அமரச் செய்தது காமராஜர்தான். அதேநேரம் நெருக்கடி நிலை காலத்தில் இந்திரா காந்தியைக் காமராஜர் விமர்சித்தார். பதிலுக்கு யார் இந்த காமராஜர்? என்று இந்திரா காந்தி ஆவேசப்பட்டார். காமராஜரை இந்திரா காந்தி விமர்சித்த ஒரே காரணத்துக்காகத் தன் வாழ்வின் கடைசி நிமிடம் வரை மீண்டும் காங்கிரஸ் கட்சியிலேயே சேரவில்லை முகமது இஸ்மாயில். அந்த அளவுக்கு அதிதீவிரக் காமராஜர் பற்றாளர் அவர்.''

இவ்வாறு மறைந்த முகமது இஸ்மாயில் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார் தக்கலை ஹலீமா.

SCROLL FOR NEXT