தமிழகம்

சத்துணவு ஊழியர் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

ஓய்வூதியம், பணி வரன்முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கடந்த 28-ம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தினர். அன்றிரவு சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் 15-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பா.வளர்மதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டனர். கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து நிறைவேற்றுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று காலை தலைமைச் செயலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி மற்றும் அரசு ஊழியர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 6 பேர் சமூக நலத்துறை அமைச்சர் பி.வளர்மதியை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு நிருபர்களிடம் பழனிச்சாமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் கூறும்போது, ‘‘பணி நிரவல், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது’’ என்றனர்.

SCROLL FOR NEXT