தமிழகம்

பாஜகவில் இணைய எல்.முருகன் அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி; அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் முடிவு: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிவிப்பு

செய்திப்பிரிவு

பாஜகவில் இணையுமாறு அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் அறிவிப்பேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர், திமுக தென் மண்டல அமைப்பாளர் என்று திமுகவில் முக்கிய சக்தியாக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அழகிரி, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தீவிர அரசியலுக்கு வருவார், திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், தனது தந்தை கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி சென்னையில் அமைதிப் பேரணி நடத்தியதோடு அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

இந்நிலையில், வரும் 21-ம் தேதி சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மு.க.அழகிரி சந்திக்க இருப்பதாகவும், பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, காங்கிரஸ் தேசியசெய்தித் தொடர்பாளராக இருந்தகுஷ்பு ஆகியோர் பாஜகவில் இணைந்ததைப்போல மு.க.அழகிரியும் அக்கட்சியில் இணைவார் என்று பேசப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் இனியும்அமைதியாக இருந்தால் அரசியலில் எதிர்காலம் இல்லாமல் போய்விடும். எனவே, விரைவில் ஏதாவது ஒரு முடிவை எடுக்குமாறு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்,‘‘மு.க.அழகிரியை நான் சந்திக்கவில்லை. அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்’’ என்றார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மு.க.அழகிரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘மு.க.அழகிரி பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்று எல்.முருகன் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தக் கட்சியிலும் இணைவது பற்றியோ, அரசியல் தொடர்பான எந்த நிலைப்பாட்டையோ இதுவரை நான் எடுக்கவில்லை. இது கரோனா காலம். அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். எனவே, ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி எனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT