சர்வதேச அளவில் பின்னலாடை உற்பத்தியில் தவிர்க்க முடியாத இடம்பெற்ற திருப்பூர் தொழில் துறையானது, கரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தது. குறிப்பாக, அண்டை நாடுகளுக்கு இணையான விலை கொடுக்க இயலாமை, மூலப்பொருள் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை ஆகியவற்றால் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
திருப்பூரை பொறுத்தவரை ஆண்டுதோறும் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கரோனா சூழலால் உள்நாட்டு வர்த்தகம் சரிந்த நிலையில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெரும் வர்த்தகம் நடைபெறும் தருணமாகும். இதனால் கரோனா ஏற்படுத்திய தொழில் பாதிப்பை தீபாவளி வர்த்தகம் ஈடுசெய்யும் என்றே, திருப்பூரை சேர்ந்த உள்நாட்டு உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கேற்ப, தீபாவளி பண்டிகை கால வர்த்தகம், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கை கொடுத்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, "திருப்பூரிலிருந்து மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி, குஜராத் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பின்னலாடை அனுப்பி வைக்கப்படுகிறது. கரோனா பாதிப்பால் முடங்கி கிடந்த உள்நாட்டு வர்த்தகம், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மெல்ல மீண்டது. இது தேக்கத்தில் இருந்த கையிருப்பு சரக்குகள் காலியாக உதவியது. ஆனால், பெரிய அளவில் புதிய ஆர்டர்கள் வரப்பெறவில்லை. இதனால், தீபாவளி பண்டிகையை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தனர். எதிர்பார்ப்புக்கு ஏற்ப தீபாவளிக்கான உள்நாட்டு வர்த்தகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பலருக்கு ஆர்டர்களை செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்படும் அளவுக்கு, பண்டிகை ஆர்டர்கள் வரப்பெற்றன. கடந்தாண்டு தீபாவளி மற்றும் நடப்பாண்டு தீபாவளி வர்த்தகம் ஆகியவற்றை ஒப்பிட முடியாத சூழல் இருந்தாலும், கரோனா கால பாதிப்புடன் ஒப்பிடும்போது உள்நாட்டு வியாபாரம் நல்ல நிலையில் உள்ளது. கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்காமலும், ஊரடங்கு உத்தரவுகள் வராமலும் இருந்தால் இது தொடர வாய்ப்புள்ளது" என்றார்.