கனமழை காரணமாக வாயலூர் பாலாற்று தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. 
தமிழகம்

வாயலூர் பாலாற்று தடுப்பணையில் உபரிநீர் வெளியேற்றம்

செய்திப்பிரிவு

திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வாயலூர் தடுப்பணை நிரம்பி உபரிநீர் கடலில் கலந்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் கடலின் முகத்துவாரம் அருகே பாலாற்றின் குறுக்கே கடந்த 2019-ம்ஆண்டு அணுமின் நிலைய நிர்வாகம் மூலம் 5 அடி உயரத்துக்கு தடுப்பணை அமைக்கப்பட்டது.

5 கி.மீ. தேங்கிய தண்ணீர்

தடுப்பணை அமைக்கப்பட்டமுதல் ஆண்டே அணை நிரம்பி உபரிநீர் வெளியேறியது. மேலும், தடுப்பணை பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு பாலாற்று படுகையில் தண்ணீர் தேங்கியதால் கரையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால், பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டு தடுப்பணை வேகமாக நிரம்பி அதன் முழு கொள்ளளவை எட்டியது. நேற்று காலை முதல் உபரிநீர் வெளியேறி கடலில் கலந்து வருகிறது.

உபரிநீர் வெளியேறுவதை, சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் ஈசிஆர் சாலையில் செல்லும் பயணிகள் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், உபரிநீர்குடியிருப்பு பகுதிகளை சூழாமல் கடலில் கலக்கும் வகையில் முகத்துவார பகுதியிலிருந்து கடல்மணலை அகற்றும்பணி நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT