காசி பாலியல் வன்முறையில் ஈடுபட உதவியாக அவரது வெளிநாட்டு நண்பரைக் கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி(28) என்பவர் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், மருத்துவர்கள் என பெண்களை குறிவைத்து சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி அவர்களை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருப்பதும், அவர்களிடமிருந்து பணம் பறித்ததும் பெண்கள் அளித்த தொடர் புகார்கள் மூலம் தெரியவந்தது.
இது தொடர்பாக காசி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
காசி மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் நாகர்கோவிலில் காசியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாப், மற்றும் செல்போன்களில் இருந்து வலுவான ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸார் திரட்டியுள்ளனர். காசியால் ஏமாற்றப்பட்ட பெண்களிடம் ரகசிய வாக்கு மூலங்களையும் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காசிக்கு சிறைக்குள் போலீஸார் சலுகை காட்டியதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து காசி, மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன், நண்பர் டேசன் ஜினோ ஆகியோர் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர்.
காசியின் பாலியல் குற்றங்களுக்கு உதவியதாக ஏற்கனவே அவரது நண்பர்கள் கவுதம், டேசன்ஜினோ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவருக்கு உதவிய நாகர்கோவிலைச் சேர்ந்த மற்றொரு நண்பர் துபாயில் உள்ளார். அவரைக் கைது செய்து மேலும் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதனால் வெளிநாட்டில் இருக்கும் காசியின் நண்பரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.