சபரிமலை தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை வெகுவாய்க் குறைந்துள்ளது. இதனால் தமிழக-கேரள எல்லையான குமுளியில் பக்தர்களை சார்ந்திருக்கக் கூடிய பல்வேறு தொழில்கள் களைஇழந்து விட்டன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை துவங்கியுள்ளது. கார்த்திகை முதல் தேதி முதல் தொடர்ந்து 41நாட்களுக்கு இதற்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தற்போது கரோனா பாதிப்பு தொடர்வதால் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி தினமும் ஆயிரம் பக்தர்களே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான முன்பதிவும் முடிந்து விட்டது.
தரிசனத்திற்குப் பதிவு செய்தவர்கள் கேரளா செல்வதற்கான இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். தரிசன நாளில் 24 மணிநேரத்திற்கு மிகாத கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் கரோனா சான்றிதழ் பெறுவதில் பக்தர்களுக்கு மிகவும் காலதாமதமாகி வருகிறது. பரிசோதனை செய்து பல மணி நேரத்திற்குப் பிறகே இது குறித்த விபரம் தரப்படுகிறது. இவற்றுடன் சபரிமலை செல்வதற்குள் காலதாமதமாகி விடுகிறது. குழுவாக செல்லும் போது ஓட்டுனர் உள்ளிட்ட பலருக்கும் இந்த சோதனை அவசியமாகிறது. அனைவருக்கும் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் கரோனா பரிசோதனை மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா சான்றிதழ் பெறாதவர்கள், சான்றிதழ் பெற்று 24மணிநேரத்தை கடந்தவர்களுக்கு இங்கு சோதனை செய்யப்படுகிறது.
இதில் ஒருவருக்கு பாசிட்டிவ் என்றாலும் குழுவாக வந்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நிலை உள்ளது.
மேலும் கோயில், பம்பை உள்ளிட்ட எந்த இடங்களிலும் தங்கக் கூடாது, பம்பையில் குளிக்க அனுமதியில்லை. பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய முடியாது என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் சொந்த வாகனத்தில் வரும் பக்தர்கள் பம்பை வரை செல்ல அனுமதி உண்டு. பின்பு வாகனங்களை 12 கிமீ.தூரம் உள்ள நிலக்கல்லில் நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தரிசனம் முடித்த பக்தர்கள் பம்பையில்இருந்து நிலக்கல்லிற்கு கேரள அரசுப் பேருந்தில் சென்ற பின்பு தங்கள் வாகனங்களில் ஊர் திரும்ப முடியும்.
இதுபோன்ற பல்வேறு நிபந்தனைகளினால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை வெகுவாய் குறைந்துள்ளது. தரிசனத்திற்காக புக்கிங் செய்தவர்களில் பலரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டல கால பூஜைக்கான துவக்க நாட்களில் கோயில் வளாகத்தில் கூட்டம் இல்லாத நிலையே உள்ளது.
தமிழக-கேரளா எல்லையான குமுளியில் சபரிமலை சீசனில் சிப்ஸ், தங்கும் விடுதி, வாடகை வாகனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் பல்வேறு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐயப்ப பக்தர்கள் கூறுகையில், இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாது. எனவே வீட்டிலேயே விரதம் இருந்து அன்னதானம் செய்து அருகில் உள்ள கோயில்களில் வழிபாடுகளை செய்ய உள்ளோம் என்றனர்.