குறும்பனை பெர்லின். 
தமிழகம்

அதிகரிக்கும் புற்றுநோய்த் தாக்கம்: குமரியில் ஆராய்ச்சி மையம் அமைக்கக் கோரிக்கை

என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குமரியில் இது தொடர்பாக ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளரும், ‘கதிகலக்கும் கதிரியக்கம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியருமான குறும்பனை பெர்லின் 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் பேசினார்.

“அண்மையில் குமரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு வந்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது செய்தியாளர்கள் குமரி மாவட்டத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்துக் கேள்வி கேட்டார்கள். அப்போது முதல்வர் அப்படியான தரவுகளோ, அறிக்கையோ அரசிடம் இல்லை என ஒரே வரியில் அதைக் கடந்துவிட்டார். ஆனால், தமிழக அளவில் குமரி மாவட்டத்தில்தான் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இயல்பாகவே குமரி மாவட்டக் கடற்கரை மண்ணில் ரேடியேஷன் அதிகம். இதுபோக, மணவாளக்குறிச்சி பகுதியில் மத்திய அரசின் அரிய வகை மணல் ஆலை இயங்கி வருகிறது. இதனால் இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் கதிரியக்கம் அதிக அளவில் இருக்கிறது. மணல் ஆலையைச் சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் ஆண்டுக்கு 30 பேர் வரை புற்றுநோயால் மரணித்து வருகின்றனர்.

மாதந்தோறும் நடக்கும் மீனவர்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் குமரி கடலோரக் கிராமங்களில் அதிகரித்து வரும் புற்றுநோய் தாக்கம் குறித்து ஆய்வுசெய்யக் கேட்டும் மனு கொடுத்து வருகிறோம். அதற்கெல்லாம், ‘அரசின் பரிசீலனையில் உள்ளது’ என்கிற வார்த்தைதான் திரும்பத் திரும்ப பதிலாகக் கிடைத்து வருகிறது.

குமரி மாவட்டக் கடற்கரைக் கிராமங்களில் ஒரு சுற்று, சுற்றி வந்தாலே வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரியவரும். கடந்த 2009-ம் ஆண்டு குமரி மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவது தொடர்பாக ஆய்வுசெய்ய அப்போதைய தமிழக அரசு, 19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை.

குமரி மாவட்ட ஆட்சியராக ராஜேந்திர ரத்னூ இருந்தபோது மத்திய அரசின் அரியவகை மணல் ஆலையை ஒட்டியுள்ள சின்னவிளை, பெரியவிளை, புதூர், கொட்டில்பாடு பகுதியில் உள்ள மக்கள், மணல் ஆலையில் இருந்து வெகுதூரத்தில் இருக்கும் மணக்குடி, புன்னைநகர், பள்ளம் பகுதியைச் சேர்ந்த மக்கள், கடற்கரைப் பகுதியே இல்லாத மலைப்பகுதி கிராம மக்கள் ஆகியோரிடம் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகளையும் அறிவிக்கவில்லை. மொத்தம் 30 ஆயிரம் மக்களிடம் நடந்த ஆய்வு அது.

திருவனந்தபுரத்தில் இருக்கும் மண்டலப் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்குச் சென்றால் அங்கு வரும் பத்து நோயாளிகளில் ஒருவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பார். அரசு இவ்விஷயம் தொடர்பாக உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காகக் குமரி மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். அதேபோல நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கான நவீன சிகிச்சை வசதியையும் ஏற்படுத்தவேண்டும்” என்றார் குறும்பனை பெர்லின்.

SCROLL FOR NEXT