தமிழகம்

குமரியில் கனமழை பெய்தும் அணைப்பகுதிகளில் மழையின்மையால் நீர்வரத்து அதிகரிக்கவில்லை

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்தபோதும் அணைப் பகுதிகளில் மழையின்மையால் உள்வரத்து தண்ணீர் அதிகரிக்கவில்லை.

குமரி கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் மேகமூட்டத்துடன் குளிரான தட்பவெப்பம் நிலவியது. அவ்வப்போது சாரல் பொழிந்தது.

அதே நேரம் நேற்று மாவட்டம் முழுவதும் பெய்த பரவலான கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

அதிகபட்சமாக மயிலாடியில் 85 மிமீ., மழை பெய்திருந்தது. கொட்டாரத்தில் 81 மிமீ., சிற்றாறு ஒன்றில் 28, நாகர்கோவிலில் 37, கன்னிமாரில் 15, பூதப்பாண்டியில் 16, சிவலோகத்தில் (சிற்றாறு 2) 21, சுருளகோட்டில் 11, பாலமோரில் 17, இரணியலில் 14, குளச்சலில் 11, மாம்பழத்துறையாறில் 19, ஆரல்வாய்மொழியில் 29, குருந்தன்கோட்டில் 17, அடையாமடையில் 23, ஆனைகிடங்கில் 19, பேச்சிப்பாறையில் 7, பெருஞ்சாணியில் 8, முக்கடலில் 7 மிமீ., மழை பெய்திருந்தது.

கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

கும்பப்பூ நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏற்ற சூழல் நிலவியது. அதே நேரம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் மிதமான சாரல் மட்டுமே பெய்தது. மலையோரங்களில் போதிய மழை இல்லாததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து எப்போதும் போலவே இருந்தது. தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை.

பேச்சிப்பாறைக்கு முன்பு இருந்தது போன்று 851 கனஅடியும், பெருஞ்சாணிக்கு 251 கனஅடி தண்ணீர் மட்டுமே உள்வரத்தாக வந்தது. நீர்வரத்து அதிகரிக்காததால் நீர்மட்டம் மேலும் உயரவில்லை. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.25 அடியாகவும், பெருஞ்சாணி நீர்மட்டம் 69 அடியாகவும் உள்ளது.

SCROLL FOR NEXT