தமிழகத்தை சேர்ந்த ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகம் மற்றும் அருகமை மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் 4,500-க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள், சவுதி அரேபியாவுக்கு சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்வார்கள். தமிழகம், புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபர் தீவுகளைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்களின் வசதிக்காக கடந்த 1987-ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஜெட்டாவுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கரோனா தொற்று காலத்தில், ஹஜ் பயணிகள் புறப்பாட்டு மையங்களை 21-ல் இருந்து 10 ஆக இந்திய ஹஜ் குழு குறைத்துள்ளது. இப்பட்டியலில் சென்னையும் விடுபட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஹஜ் பயணிகள் கொச்சியில் இருந்து புறப்பட்டுச் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் பயணிகள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் கொச்சி செல்வது மிகவும் சிரமமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு, வரும் 2021-ம் ஆண்டுக்கான ஹஜ் பயண தொடக்க இடம் முந்தைய ஆண்டுகள்போல சென்னையில் இருந்து அமையும்படி மாற்ற வேண்டும். புறப்பாடு சென்னையில் இருந்து அமைந்தால், அனைத்து கரோனா விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ நுழைவுத் தேர்வு
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
டெல்லி எய்ம்ஸ் மற்றும் புதிய எய்ம்ஸ் கல்வி நிறுவனங்கள், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான (எம்டி, எம்எஸ், டிஎம், எம்.சிஎச்) சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘இனி-செட்’ ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்களுக்கு தேர்வுமையங்கள் அவர்களதுஇருப்பிடத்தில் இருந்து மிகவும்தொலைவான பகுதிக்கு, அதாவது ஆந்திராவில் உள்ளசித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது. மதனபள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களுக்கும் தமிழகத்துக்கும் போதுமான இணைப்பு வசதி இல்லை. மேலும் அந்த இடங்கள் தமிழக மாணவர்களின் இருப்பிடத்தில் இருந்து 175 கி.மீ. முதல் 250 கி.மீ.தொலைவில் இருப்பவை. இதனால் அவர்கள் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, தமிழக மாணவர்கள் தமிழகத்தில் தேர்வு எழுத வசதியாக கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.