தற்கொலை என்பது சட்டப்படி தண்டிக்கத்தக்க குற்றமா அல்லது வாழ்வுரிமையா என்பதை விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
கணவரைப் பிரிந்து 30 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வரும் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியதாக மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு:
நாட்டின் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமை குறித்தும், எந்தச் சட்டத்திலும் இல்லாத இறப்புக்கான உரிமை குறித்தும் பெரியளவில் விவாதம் நடந்து வருகிறது. நாட்டின் எந்தச் சட்டத்திலும் இறப்பதற்கு உரிமை ஏதும் வழங்கப்படவில்லை. இருப்பினும் சிலர் வாழ்வுரிமை இருப்பதுபோல், இறப்பதற்கும் உரிமை இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தில் தற்கொலை தண்டனைக்குரிய குற்றமாக இல்லை. தற்கொலைக்குத் தூண்டியவருக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. தற்கொலைக்குத் தூண்டும் விஷயத்தில் விசாரணை அமைப்பும், நீதிமன்றமும் ஒரு முடிவுக்கு வருவதில் பெரிய சிரமம் உள்ளது. இது ஒவ்வொரு வழக்கின் சூழல் மற்றும் உண்மைத் தன்மையைச் சார்ந்துள்ளது.
ஆண் வர்க்க சமுதாயத்தில் ஒருவருடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது என்பது மிகவும் பொதுவானது. நம் நாட்டில் ஒரே பாலினத்துக்குள்ளேயே ஒருவருடைய நற்பெயருக்கு மற்றொருவர் களங்கம் விளைவித்தல் நடைமுறையில் உள்ளது.
யூகத்தின் அடிப்படையில் செய்யப்படும் நடத்தையை குறை கூறுதல் தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. புறம் கூறுதல் மற்றும் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல் ஆகியன பேராசை பிடித்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட குணமாகும். சில நேரங்களில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் கூறும் கருத்துகள்கூட ஒரு நபரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறது.
தற்கொலை என்பது சட்டப்படியாக தண்டிக்கத்தக்க குற்றமா அல்லது தற்கொலை என்பது ஒரு மனிதனின் வாழ்வுரிமையா என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது. வாழ்வுரிமை என்பது ஒரு மனிதன் தன்னுடைய மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை உள்ளடக்கியதா என்பது குறித்தும் விரிவாக விவாதிக்க வேண்டியதுள்ளது. இதுகுறித்து சட்டம் இயற்றுவோர், வல்லுநர்கள், கல்வியாளர்கள் உதவியுடன் விரிவாக ஆய்வு நடத்தி தீர்வு காண வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் தினமும் காலை 10.30 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.