கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் கரைபுரண்டு ஓடும் மழைநீர். 
தமிழகம்

கூடுவாஞ்சேரி, சாத்தங்குப்பம் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: அம்மணம்பாக்கம் ஏரி மீண்டும் உடைப்பு

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து நேற்றுமுதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், சாத்தங்குப்பம் பகுதிகளின் தாழ்வானப் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் போலீஸார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் காட்டாங்கொளத்தூர் அருகே நின்னக்கரை ஏரி நிரம்பியதால் ஏரியில் இருந்து வெளியேறும் நீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது.

தெருக்களில் தேங்கிய மழைநீர்

திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியின் சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள நகர், கணபதி நகர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தெருக்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மழைநீர் சூழ்ந்த பகுதிகளை திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன் பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, “குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறோம். மழைநீர் வெளியேற வடிகால் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

படப்பை அருகே ஒரத்தூர்ஊராட்சியில், ஆக்கிரமிப்பாளர்களால் 3-வது முறையாக அம்மணம்பாக்கம் ஏரி உடைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: அம்மணம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு, ஒரத்தூர் ஊராட்சி நிர்வாகத்தால் சாலை, குடிநீர், மின்சார வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. மழைக் காலத்தில், ஏரி விரைவாக நிரம்பி ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் தண்ணீர் தேங்குவதால், ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும்இந்த ஏரிக்கரையை உடைத்து, ஏரி நீரை வெளியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஏரியில் இருந்து வெளியேறும் நீர் படப்பை ஏரியில் கலந்து, அடையாறு ஆற்றுக்கு செல்கிறது. பிறகு வீணாக கடலில் கலக்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக செயல்படாமல் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT