காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி, கன மழையால் வேகமாக நிரம்பி வருகிறது. 
தமிழகம்

காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் வீராணம் ஏரியில் நீர்மட்டம் அதிகரிப்பு: வேகமாக நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில்,சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதிகளில் சுமார் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான முஷ்ணம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், காட்டாறுகள் மூலம் விநாடிக்கு 150 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

கீழணைக்கு மேல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கீழணைக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 45.5 அடியாக உள்ளது. சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 70 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு பாசன மதகுகள் மூலம் விநாடிக்கு 25 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தால் ஓரிரு நாளில் வீராணம் ஏரி நிரம்பி உபரி நீர் வடிகால் மதகுகளில் திறந்து விடப்படும் நிலை ஏற்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT