கோவை மத்தியச் சிறை வளாகத்தில் மூலிகைப் பண்ணைத் தோட்டம் மற்றும் முயல் விற்பனைத் திட்டம் இன்று (16-ம் தேதி) தொடங்கப்பட்டது.
கோவை மத்தியச் சிறையில், விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 1,200க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் சிறையில் கைத்தொழிலைக் கற்றுக்கொள்ளும் வகையில், தொழில் கூடம், துணிகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கோவை மத்திய சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒரு பகுதியாக, சில வாரங்களுக்கு முன்னர் சிறை வளாகத்தின் ஒரு பகுதியில் முயல் வளர்ப்பு மையம் என்ற திட்டம் 5 ஜோடி முயல்களுடன் தொடங்கப்பட்டது.
அந்த ஜோடிகள் இனப்பெருக்கம் செய்து, குட்டி ஈன்று தற்போது 70க்கும் மேற்பட்ட முயல்கள் உள்ளன. தவிர, சிறை வளாகத்தின் ஒரு பகுதியில் சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில், அரை ஏக்கர் பரப்பளவில் மூலிகைப் பண்ணைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகைப் பண்ணையில் செடியை நட்டும், முயல் வளர்ப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட முயல் விற்பனையையும் சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் இன்று (16-ம் தேதி) தொடங்கி வைத்தார். கோவை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார்.
மேற்கண்ட திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர், சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறும்போது, ''இங்குள்ள வளாகத்தில், அரை ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டத்தில் ஆடாதொடை, வில்வம், நாவல் மரம், தூதுவளை, நாகமல்லி, துத்திச் செடி உள்ளிட்ட 40 வகையான மூலிகைச் செடிகள் நடப்பட்டுள்ளன. இங்கு நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 4 சிறைக்கைதிகள் மூலம் இந்த மூலிகைப் பண்ணை பராமரிக்கப்படுகிறது. இவற்றில் இருந்து கிடைக்கும் மூலிகைகளை, மருந்துகள் தயாரிக்க அரசு மூலிகைப் பண்ணைக்கு அனுப்பி வைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, வளாகத்தின் ஒரு பகுதியில் பெரிய தொட்டி ஏற்படுத்தப்பட்டு மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை நன்கு வளர்ந்த பிறகு, சிறைத்துறை பஜார் மூலம் விற்பனை செய்யப்படும். மேலும், சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் வளர்க்கப்பட்ட முயல் விற்பனை நேற்று தொடங்கப்பட்டது.
பிறந்து 45 நாட்களான ஒரு ஜோடி முயல் குட்டிகள் ரூ.500 என்ற விலைக்கு சிறை பஜார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சிறைக் கைதிகளுக்குக் கரோனா தொற்று பரவாமல் இருக்க, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளைச் சிறைகளில் அடைக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர், கைதிகள் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்படுகின்றனர்'' என்றார்.