தமிழகம்

எழுவர் விடுதலையில் முடிவெடுக்காமல் தாமதம்; தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் தரவேண்டும்: கி.வீரமணி 

செய்திப்பிரிவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடுவோருக்கு விடுதலை அளிப்பது பற்றி உச்ச நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டும், அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை ஆதரவாகத் தீர்மானித்தது. ஆளுநரின் அனுமதிக்குக் கடிதம் எழுதியும், ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக அனுமதி அளிக்கவில்லை என்பது சரியானதல்ல என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை 2014இல் உருவானது.

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

அந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு 2014-ம் ஆண்டு பிப்ரவரி அன்று வழங்கிய தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டம் 161 ஆவது பிரிவு - குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 432, 433 ஆகியவற்றின் கீழ், மாநில அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்சொன்ன மூவரை விடுதலை செய்யலாம் என்றும் அறிவுறுத்தியது.

அதன்பிறகு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 433-வது பிரிவின் கீழ் இந்த மூன்று பேருடன், உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட மூவர், திமுக ஆட்சியால் கருணை வழங்கப்பட்ட நளினி ஆகியோரையும் சேர்த்து விடுதலை செய்யும் முடிவை தனது அமைச்சரவை முடிவாக எடுத்திருப்பதாக அந்நாள் முதல்வர் ஜெயலலிதா 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19இல் அறிவித்தார்!
இதன்பிறகு ஏற்பட்ட பல சட்ட வியாக்கியானங்கள், சிக்கல்களால் 6 ஆண்டுகள் ஆகியும்கூட, அம்முடிவு செயல்படுத்தப்படாமல், தாமதிக்கப்பட்டே வருகிறது.

‘அம்மா அரசு’ என்பவர்கள் என்ன செய்யவேண்டும்?

‘‘அம்மா அரசு’’தான் என்று சொல்லி வரும் அதிமுக அரசு, ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் போதிய அழுத்தம் தராமல், அம்முடிவை தள்ளிப் போட்டுக்கொண்டே போய், 28 ஆண்டுகளாக பல்வேறு ஏமாற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தி, மன உளைச்சலை நாளும் பெருக்கிக் கொண்டுள்ள வேதனையே தொடருகிறது.

கடந்த நவ.4 அன்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தபோது, அந்த அமர்வு ஒரு முக்கிய சட்டப் பிரச்சினையைத் தெளிவுபடுத்தி, ஆளுநர் இவர்களை விடுதலை செய்வதில் எந்தத் தடையும் இல்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்குக்குப் பின்னால் இருந்த சதி பற்றிய புலனாய்வு, ஏற்கெனவே தண்டிக்கப்பட்டவர்களுக்குப் பொருந்தாது; அதோடு, 20 ஆண்டுகளாகியும் முடிக்கப்படாத புலனாய்வு, எழுவரை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழ்நாடு ஆளுநர் மேற்கொள்ளவேண்டிய முடிவுக்குத் தடையாக இருக்கவேண்டியதில்லை என்றும் அந்த அமர்வு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இதற்கு மேலும் ஆளுநர் காலதாமதம் செய்வது என்பது அரசியலமைப்புச் சட்டப்படி இயங்கும் நிர்வாகத் துறை (Executive), நீதித்துறை (Judiciary S.C.), சட்டப்பேரவை (Legislative) அதில் அறிவிக்கப்பட்ட அரசு முடிவு ஆகிய மூன்று முக்கியத் துறைகளையும் பற்றிக் கவலைப்படாது, புறந்தள்ளும் அலட்சியம் ஆகும்! இது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. இனியும் நியாயப்படுத்த முடியாத, காலதாமதம் செய்யக் கூடாத ஒன்றாகும்.

மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் கூறியதைக் கேளுங்கள்

அண்மையில், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பிரபல சட்ட அறிஞரும், முன்னாள் மத்திய அரசு தலைமை வழக்குரைஞருமான மோகன் பராசரன், ‘‘தமிழக ஆளுநர் இனியும் இந்த எழுவர் விடுதலைப் பிரச்சினையில் காலதாமதம் செய்யக் கூடாது. நவம்பர் 23 ஆம் தேதிக்குள் அவர்களை விடுதலை செய்யும் முடிவை அறிவிப்பது அவருக்கு நல்லது’’ என்ற ஒரு முக்கிய சட்ட வலிமைமிக்க கருத்து கூறியதை நாட்டு மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

மோகன் பராசரன் போன்றவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்லர். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சட்ட வல்லுநர், மூத்த வழக்குரைஞர். அவர்களைப் போன்றவர்கள் கருத்தையும்கூட ஆளுநர் உதாசீனப்படுத்திடுவதும், தமிழக அரசும் சட்ட ரீதியாகவும், நியாயப்படியும் இதில் மேலும் அழுத்தம் தராது, சும்மா இருப்பது, இது ‘‘அம்மா அரசு’’ என்பதையா காட்டுகிறது?

எனவே, இனியும் காலந்தாழ்ந்துவிடாது. எழுவர் விடுதலையை உடனடியாக செயல்படுத்தட்டும்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே!

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை அறியாதவர்களா? ஆட்சியாளர்களும், ஆளுநரும் என்ற கேள்வி எங்கும் எதிரொலிக்கிறது”.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT